வன்னியர் + நாடார்.. நாமெல்லாம் ஒன்று சேர்ந்தால்? அன்புமணி ராமதாஸின் அரசியல் கணக்கு!
மதுரை: மதுரையில் நடைபெற்ற நாடார் மஹாஜன சங்க மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், நாமெல்லாம் ஒன்று சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் ஆட்டொமெட்டிக்காக வந்து சேரும் என்றும் எத்தனை நாட்களுக்கு தான் அடுத்தவர்களையே நம்பியிருப்பது எனவும் பேசியிருக்கிறார்.
இவர்களிடம் கேட்பது, அவர்களிடம் கேட்பதெல்லாம் வேண்டாம் என்று பேசிய அன்புமணி, வாங்க, நம்ம ஒன்று சேர்ந்து ஆளுவோம் என நாடார் மஹாஜன சங்க மாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளார். நாம் ஆளுகிற காலம் வந்துவிட்டது என்று சூடேற்றிய அன்புமணி ராமதாஸ், நமக்கு தேவை 2 எம்.எல்.ஏ.வோ, 2 எம்.பி.யோ கிடையாது, முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஆட்சி, அதிகாரம், போன்ற பதவிகள் தான் நமக்கு வேண்டுமே தவிர வேறு அல்ல என்றார்.

காமராஜர் மட்டும் இல்லை என்றால், தமிழ்நாடு வறண்ட மாநிலமாக மாறியிருக்கக் கூடும் என்றும் அவர் ஏற்படுத்திய தொழில்புரட்சியால் தமிழகம் இன்று இந்தளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அன்புமணி காமராஜரை புகழ்ந்தார். என்னதான் கேட்டாலும் திமுகவும், அதிமுகவும் நமக்கு எதுவும் செய்யப்போவதில்லை என்று பேசிய அன்புமணி ராமதாஸ், இனி நாம் ஒன்று சேர வேண்டும் என நாடார் சமுதாய மக்கள் மத்தியில் அழைப்பு விடுத்தார்.
இவர் பேசியதை வைத்துப் பார்த்தால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் பாமக சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது போல் தெரிகிறது.
அன்புமணியின் இத்தகைய பேச்சுக்கு மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பலரும் பலத்த கரவொலி எழுப்பி தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இது அன்புமணி ராமதாசுக்கு உற்சாகம் கொடுத்தது. தென் மாவட்டங்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றும் தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் எந்த தொழிற்சாலைகளும் கொண்டு வரப்படவில்லை எனவும் வேதனைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications