சார்.. ஆறுமுகசாமி அறிக்கை பற்றி என்ன சொல்றீங்க.. நிருபர்கள் கேள்விக்கு ஓபிஎஸ் பதில் என்ன தெரியுமா?
மதுரை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். மேலும், எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

சட்டசபையில் அறிக்கை தாக்கல்
இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை ஆணையம் டாக்டர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்களிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிந்த நிலையில் 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை சமீபத்தல் முதல் அமைச்சர் முக ஸ்டாலினிடம் ஆணைய தலைவர் ஆறுமுகச்சாமி தாக்கல் செய்தார். இந்த ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சசிகலா உள்பட 4 பேரிடம் விசாரிக்க பரிந்துரை
அதன்படி, ‛‛ஜெயலலிதா 22.09.2016ல் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் சுமின் சர்மா கூறியபோதும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் சூழல் இருந்தும் அதனை செய்யவில்லை. மருத்துவமனையில் பல நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஜெயலலிதா இறந்த நேரம் மாற்றப்பட்டு திட்டமிட்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. சசிகலா, டாக்டர். கேஎஸ் சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக கருதி விசாரணை நடத்த வேண்டும்'' என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

விடைகள் இல்லையே?
ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மமூடிச்சுகளை அவிழ்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் இந்த அறிக்கையில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லையே என தொண்டர்கள், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கை மீது தமிழ்நாட்டு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.

ஓ பன்னீர் செல்வம் பேட்டி
இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்த பேசினார். இந்த வேளையில் ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கை, முத்துராமலிங்க தேவர் தங்ககவசம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு ஓ பன்னீர் செல்வம் பதிலளித்தார். இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:

கருத்து கூற விரும்பவில்லை
தங்க கவசத்தை பொறுத்தமட்டில் அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ அதனை நாங்கள் ஏற்போம். ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சில பேர் நீதிமன்றத்துக்கு போவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த வழக்கு முடியும் வரை இந்த விஷயத்தில் கருத்து கூற விரும்பவில்லை.

அரசியலில் விலக தயார்
அதிமுக விஷயத்தில் அவர்களின் நடவடிக்கையை ஒவ்வொருவரும் பார்த்து வருகின்றனர். இதில் யார் மீது குற்றம் என்பதை தமிழக மக்கள் கணித்து வைத்துள்ளனர். நேற்று கூட ஏதோ பொத்தம் பொதுவாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. நான் இதுவரை யாருக்கும் கடுமையான சொல்லை சொன்னது இல்லை. நான் முதல் அமைச்சரை சந்தித்ததை அவர் (எடப்பாடி பழனிச்சாமி) நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத்தயார். நிரூபிக்கவில்லை என்றால் அவர் அரசியலை விட்டு விலகத்தயாரா? என கேட்டுள்ளேன். இதற்கான பதிலை கேட்டு சொல்லுங்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications