அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளை முட்டியதில் மாடு பிடி வீரர் நவீன் பலியான சோகம்
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாடு பிடி வீரரான விளாங்குடியை சேர்ந்த நவீன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. மாலை 4 மணி வரை 10 சுற்றுகள் முடிவடைந்துள்ளன.

இன்று காலை 6.30 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. போட்டி தொடங்கியதில் இருந்தே, மாடு பிடி வீரர்கள், திமிறி வரும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி வருகிறார்கள். ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. ஒருசில காளைகள் வீரர்களை முட்டி தாக்கியது. இதில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காளையை அடக்க முயற்சிக்கும் போது, நவீன் குமார் என்ற மாடுபிடி வீரரின் நெஞ்சில் காளை முட்டியது. இதில் அவரது மார்பில் கொம்பு குத்தி ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று நடக்கின்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெரும் காளைக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட இருக்கிறது. அதேபோன்று சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. இதுபோக காளையை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பீரோ, அண்டா, கட்டில் என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இன்று நடக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மொத்தம் 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தார்கள். இவர்களில் சிறந்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நேற்று டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை போட்டி தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட கலெக்டர் சங்கீதா ஆகியோர் போட்டியை இன்று தொடங்கி வைத்தனர்.
முதல் சுற்று முடிவின் போது, 3 காளைகளை அடக்கிய மணிகண்டன் என்ற மாடுபிடி வீரரும் காயமடைந்தார். ஒரு மாட்டைப் பிடிக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்று இன்றைக்கு மொத்தம் 9 வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications