அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளைகள் மீது பவுடர் தூவினால் பரிசு கிடையாது.. மதுரை கலெக்டர் வார்னிங்
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மீது பவுடர் தூவினால் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், பவுடர் வீசப்பட்டு வரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்க டோக்கன் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார். ஒரு சிலர் பரிசுகளுக்கு ஆசைப்பட்டு இதுமாதிரியான செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இன்று இந்த பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். பொங்கல் என்றால் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் பொங்கலிட்டு, கடவுளை வழிபடுவர். இது மட்டும் இன்றி பொங்கல் பண்டிகை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல ஊர்களில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு நடக்கும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று பொங்கல் திருநாளன்று நடக்கிறது. இன்று காலை 6.30 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
தொடர்ந்து மதியம் 3 மணியளவில் 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. வாடிவாசலில் துள்ளிக்குதித்து வந்த காளைகளை வீரர்கள் அடக்கி வருகிறார்கள். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் செல்லும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, பீரோ, குக்கர், அண்டா என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சிலர் காளைகள் மீது பவுடர்களை தூவி விடுவதாக புகார் வருகிறது.
அதாவது காளைகள் மீது பவுடர் தூவுவதனால், அதனை வீரர்கள் பிடிக்க முற்படும் போது வழுக்கி காளையை பிடிக்க முடியாமல் போய்விடும். இதனை வைத்து காளை உரிமையாளர்கள் பரிசு பெற எண்ணுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காளைகள் மீது பவுடர் தூவினால் பரிசு வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார். மேலும், பவுடர் வீசப்பட்டு வரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்க டோக்கன் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் பரிசுகளுக்கு ஆசைப்பட்டு இதுமாதிரியான செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கியது. வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஆன்லைனில் பெயரை பதிவு செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டு இன்றைய போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடையும் வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்கள் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று மட்டும் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications