காவலர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்.. தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: காவல் துறையினரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணும் வகையில் வார விடுப்பு வழங்கி தமிழக முதல்வர் அறிவித்து அந்த அறிவிப்பு தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மனுதாரரின் கோரிக்கை நியாயமானது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆஸ்டின்பட்டியை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் கூறுகையில், "தமிழ்நாடு காவல் துறையில் பணிச்சுமை அதிகம் உள்ளது. ஓய்வின்றி பணியாற்ற வேண்டி உள்ளதாக, காவலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுகிறது. மேலும் பல்வேறு பிரச்சினைகளை காவலர்கள் எதிர்கொள்கின்றனர்.

எனவே காவலர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் இந்த அரசாணை தமிழகத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் காவலர் செந்தில்குமார் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பட்டு தேவானந்த் , "கடந்த 2021 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ஏன் முறையாக அமல்படுத்தவில்லை? 2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில் அரசாணை விளம்பர நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது என்று கூற இயலுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழ்நாடு காவல் துறையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் உள்ள நிலையில் வார விடுமுறை வழங்கப்படவில்லை என்று ஒரு காவலர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை இந்த உயர் நீதிமன்றம் பாராட்டுகிறது. மற்ற காவலர்கள் மவுனமாக இருப்பது உயர் அதிகாரிகளின் மீதான அச்சம் என்கிற தகவல் வியப்பாக உள்ளது. ஜனநாயகம், மனித உரிமை அனைவருக்கும் தான். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் போலீசாருக்கு இதுவரை சங்கம் இல்லாதது ஏன்? அந்த அரசாணையை ஏன் உயர் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை?
தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கம் இருக்கையில் தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லை? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? முதல்வரின் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிப்பது கிடையாதா?காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது? என்று தமிழ்நாடு டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்." என்று உத்தரவு பிறப்பித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று (ஏப்ரல் 28) நீதிபதி பட்டு தேவானந்த் கூறினார். இதன்படி அவர் கூறுகையில், "காவல் துறையினரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணும் வகையில் வார விடுப்பு வழங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து அந்த அறிவிப்பு தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மனுதாரரின் கோரிக்கை நியாயமானது தான்.
ஆகவே அவரது மனு ஏற்கப்படுகிறது. காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரையிலும் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை டிஜிபி உறுதிப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தாக்கல் செய்யலாம்" இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications