Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
மதுரை: தமிழகத்தில் தனியார் செயலிகள் மூலம் இயங்கும் பைக் டாக்ஸி சேவையை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவையை முறைப்படுத்துவதற்கான சட்ட விதிமுறைகள் இல்லை. பிற டாக்ஸி சேவைகளைப் போல அல்லாமல், பைக் டாக்ஸி சேவையை தனிநபர்களால் செயல்படுத்த முடியாது. அவை முழுமையாக தனியார் நிறுவன செயலிகள் அதாவது அகரிகேட்டர் நிறுவனங்கள் மூலமே இயக்கப்படுகின்றன.

அகரிகேட்டர் நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அவற்றில் பணிபுரியும் பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இது அரசியல் அமைப்பின் சமத்துவம், வாழ்வுரிமை கொள்கைக்கு எதிரானது.
அகரிகேட்டர் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த மோட்டார் வாகன சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, கட்டண நிர்ணயம், இன்சூரன்ஸ், புகார்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, பைக் டாக்ஸி சேவைகள் தொடர்பான தற்போதைய நிலை மற்றும் விதிமுறைகள் அமல்படுத்தப்படும் காலக்கெடு குறித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை முதன்மை செயலர், ஆணையர் ஜூலை 6-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications