மதுரையில் பாஜக நிர்வாகி வெட்டிப்படுகொலை.. வண்டியூரில் பதற்றம்.. பரபரப்பான பின்னணி
மதுரை: வண்டியூர் அருகே பாஜக நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் பெயர் சக்திவேல் என்பதாகும். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் மதுரை மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்துவருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் அருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3க்கும் மேற்பட்டோர் சக்திவேலை விரட்டினர். அப்போது சக்திவேல் உயிர் பயத்தில் வண்டியை வேகமாக ஓட்டிச்சென்றார். அவரை விரட்டி மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அப்போது அவர் தப்பியோட முயன்ற நிலையிலும் விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதிகாலையில் கொலை சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். டோல்கேட் உள்ளிட்ட சம்பவம் நடைபெற்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சக்திவேலுடன் ஒரு நபர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக நிர்வாகிகள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மூளிக்குளம் மிரல்மீண்ட நாயனார் தெருவை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் ஜெகன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இவர் பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மேற்கு தாம்பரம் அருகே பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொடூர கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்றைய தினம் பாஜக நிர்வாகி சக்திவேல் மதுரையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளிகளை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சக்திவேலின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications