15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக புள்ளி.. பாய்ந்தது போக்சோ.. அதிரடியாக கைது!
மதுரை: பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த எம்.எஸ்.ஷாவை மதுரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். பாஜக தலைவர்களோடு நெருக்கமாக இருந்து வரும் எம்.எஸ். ஷா, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் எம்.எஸ் ஷாவின் செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாசமான மெசேஜ்கள் வந்ததாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரியவந்ததாக குறிப்பிட்டார்.
புகார் அளித்த நபர் தனது மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாஜக பிரமுகருடன் தனியாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், வாட்ஸ் அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமிக்கு புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். பாஜக பிரமுகர் எம்.எஸ். ஷா, முதலில் தனது மனைவியிடம் கடனை அடைத்து விடுவதாகக் கூறி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததோடு மனைவியின் மூலமாக தனது மகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என புகாரில் தெரிவித்தார்.
சிறுமியின் தந்தை அளித்த இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, புகார் அளித்த தந்தையின் மீதே, மகள் மூலம் புகார் அளிக்கப்பட்டு அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டு பொய் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி, அவரது தாயாரிடம் விசாரணை நடத்திய போலீசார், பாஜக நிர்வாகி எம்.எஸ் ஷா மீதும், சிறுமியின் தாயார் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள எம்.எஸ்.ஷாவை கைது செய்ய போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எம்.எஸ்.ஷாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கல்லூரி நடத்தி வரும் பாஜக மாநில நிர்வாகி எஸ்.எஸ் ஷா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications