ஆசை ஆசையா பதவியேற்ற பாஜக.. "பிச்சிக்கிட்டு வருவார் சந்திரபாபு நாயுடு".. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு
மதுரை: 3வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றுள்ள நிலையில், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரை இவர்கள் நடத்துவார்களா? என்று மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக மார்தட்டி வந்தது.. ஆனால், பாஜக உட்பட எந்த கட்சியுமே தனிப்பெரும்பான்மை பெறவில்லை.. எனினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பிரம்மாண்டம்: இதையடுத்து கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவெடுத்தது.. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார்.. அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பிரதமர் மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.. ஆனால் காங்கிரஸ் கட்சியோ தொடர்ந்து பாஜகவை குற்றஞ்சாட்டி வருகிறது.. அந்தவகையில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பாஜகவை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை: மதுரையில் செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் பேசியபோது, "தமிழிசை சௌந்தரராஜனின் தோல்வி அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது.. தனக்கு புருஷன் வேண்டாம் அரசன் வந்தால் போதும் என்று நினைக்கிறார்.. கவுன்சிலராக நின்றால் கூட வெற்றி பெற முடியாத அண்ணாமலை கோவையில் நின்று தோல்வியை தழுவியிருக்கிறார். தமிழிசை, எல்.முருகன் மாநில தலைவராக இருந்த காலகட்டத்தை விட தற்போது பாஜக வலுவிழந்திருக்கிறது.
எப்படி பார்த்தாலும், எந்த காலத்திலும் தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது.. இப்போது கிடைத்திருக்கும் வாக்குகள்கூட, கூட்டணி கட்சியினரால் கிடைத்த வாக்குகள்தான்.
வட மாவட்டம்: வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகள் பாஜகவிற்கு கிடைத்ததால் தான் பாஜகவின் வாக்கு வங்கி அதிகமாகியிருக்கிறது.. இதுபோலவே, தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சிதான், பாஜகவை உயர்த்திவிட்டிருக்கின்றன. எனவே, தமிழிசை, எல்.முருகன் மாநில தலைவராக இருந்த காலகட்டத்தை விட தற்போது பாஜக வலுவிழந்திருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அக்கட்சியே காணாமல் போய்விடும்.
அண்ணாமலையின் வாய்மொழி ஜாலத்துக்கெல்லாம் தமிழக மக்கள் மயங்கமாட்டார்கள். அண்ணாமலை தமிழக அரசியலில் மிளிரமாட்டார். அவர் எத்தனை அறிக்கை விட்டாலும், ஊடகங்களில் வந்தாலும் வெற்றி பெறமாட்டார். தோல்வியை ஏற்றுக்கொண்டு அண்ணாமலையும், தமிழிசையும் அமைதியாக இருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்: பாஜக நேர்மையாக செயல்படவில்லை.. வாரணசாயில் மோடியின் இழுபறியான வெற்றியின் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.. இவிஎம் வாக்கு இயந்திரத்தில் நம்பிக்கை வர காரணம் முதல் 3 சுற்றுகளில் மோடி பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
ஆனாலும், பிரதமர் மோடி தன்னுடைய போக்கை கடைசிவரை மாற்றிக்கொள்ளவில்லை, ஒரு நாடக நடிகரை போல செயல்படுகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகும்கூட, மோடி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவரது நடை, உடை பாவனை எல்லாமே நடிகர் மாதிரியே இருக்கிறது.. அரசியல் சாசனத்தை முத்தமிட்டு, சிறந்த வேஷம் போடுகிறார்.
உளறல்கள் தேர்தலுக்கு முன்பு உளறிக் கொண்டிருந்தார். அவர் திருந்துவதற்கு வழியே இல்லை. பாஜக எதிரியாக நினைப்பது எதிர்க்கட்சிகளை இல்லை. கூட்டணிக் கட்சிகளைத் தான். எனவே, அவருக்கு ஆதரவு தரும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் விரைவில் கூட்டணியை விட்டு வெளியேறுவர். சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கிக் கொள்ளலாம்.
ஏனென்றால், மோடி, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் இந்த கூட்டணி முற்றிலும் முரண்பட்ட கூட்டணி.. பணத்தை பங்கீடு செய்வதில் 3 பேருக்குமே முரண்பாடு வராது. பிரதமர் மோடி 3வது முறையாக பதவி ஏற்பது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வேதனையாகும்.. எப்படியும் அது இன்னும் 5 மாதத்தில் தீர்ந்துவிடும்.
சந்தேகம்: ஆனால், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரை இவர்கள் நடத்துவார்களா? என்பதே சந்தேகமாக உள்ளது.. முதலில் தனது கட்சியினரை மோடி அரவணைத்து செல்லவேண்டும். கடந்த காலங்களை போல் இஷ்டத்திற்கு செயல்பட்டால் மக்கள் அவரை தூக்கி எறிந்துவிடுவார்கள்" என்று ஈவிகேஎஸ் காட்டமாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications