"டிடிஎஃப் வாசன் காரை கொடுக்க முடியாது".. தாயின் மனு தள்ளுபடி.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை திரும்ப வழங்க முடியாது எனக்கூறி அவரது தாயின் மனுவை மதுரை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது திருப்பதி எழுமலையான் கோவிலில் நண்பர்களுடன் சென்று பக்தர்கள் காத்திருக்க வைகுண்டம் காத்திருப்பு அறையை திறப்பது போல் ‛ப்ராங்க்' செய்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டிடிஎஃப் வாசன் இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல சர்ச்சைகளில் அவர் சிக்கி உள்ளார். முதலில் விலையுயர்ந்த பைக்குகளில் பயணித்து யூடியூப்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். அப்போது அவர் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக சென்றதாக பல போலீஸ் நிலையங்களில் டிடிஎஃப் வாசன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் விபத்தில் சிக்கினார். அவர் தனது பைக்கில் வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதோடு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 45 நாளுக்கு பிறகு அவர் ஜாமீனில் வந்த நிலையில் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் பைக் ஓட்டுவதை நிறுத்தினார். இதற்கிடையே தான் கடந்த மே 29ம் தேதி மதுரை அண்ணா நகர் போலீசார் அவரை கைது செய்தனர். அதாவது சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு காரில் சென்றபோது செல்போன் பேசி ஓட்டிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டிச்சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் தாயார் சுஜாதா சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அதாவது காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காரை திரும்ப வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை இன்று நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி விசாரித்தார்.
அப்போது மனுதாரரான டிடிஎஃப் வாசனின் தாய் தரப்பு வழக்கறிஞர், ‛‛காரை திரும்ப வழங்க வேண்டும். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது'' என வாதிட்டார். எதிர்தரப்பில் காரை வழங்க கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ‛‛குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் .குற்றம் சாட்டப்பட்ட நபர் வாகனத்தை பயன்படுத்தினால் அதேபோன்ற குற்றத்தை செய்ய வாய்ப்பு இருக்கலாம். இதனால் காரை ஒப்படைக்க உத்தரவிட முடியாது''எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications