உதயநிதி தலைக்கு விலை வைத்த அயோத்தி சாமியார் மீது வழக்குப்பதிவு.. வீடியோ வெளியிட்டவர் மீதும் வழக்கு!
மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைச் சீவினால் ரூ.10 பரிசு அறிவித்த அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா மீது மதுரையில் திமுக வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவை பதிவிட்டு அவதூறு கருத்துகளைத் தெரிவித்தவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்" எனப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைச் சீவினால் ரூ. 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியா அறிவித்தார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து அதை கொளுத்தியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே, சனாதானம் குறித்து தவறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வட மாநிலங்கள் பலவற்றிலும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மதுரையில் திமுக வழக்கறிஞர் அணியினர், அயோத்தி சாமியார் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதானம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவித்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் 153, 153A (1)(a), 504, 505(1)(b), 505(2)& 506(ii) IPC 6 (கொலை மிரட்டல், பொது அமைதியை சீர் குலைத்தல், வகுப்புகள் இடையே பகை வளர்த்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications