“பாண்டியர்னா தேவர்தான்.. சீமான் ஒழிக”.. பசும்பொன்னில் எழுந்த கோஷம்.. சீமானை பேசவிடாமல் முழக்கம்!
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், தொடர்ந்து முழக்கமிட்டதால் அங்கிருந்து புறப்பட்டார் சீமான்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்குச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பட்டாளமும் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவரை போற்றும் வகையிலான திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்துராமலிங்கத்தேவர் மக்கள் செல்வாக்கை நிரூபித்தவர் எனக் கூறினார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக அங்கு கூடியிருந்த இளைஞர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். "சீமான் ஒழிக! சீமான் திரும்பிப் போ!".. என இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தலையிட்டதை அடுத்து, தேவர் நினைவிடத்தில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, குருபூஜை விழாவிற்காக வந்திருந்த இளைஞர்கள் சீமானுக்கு எதிராக தொடர்ந்து ""பாண்டியர்னா தேவர் தான்.. சீமான் வெளியே போ" என முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கூச்சல் குழப்பம் எழுந்த நிலையில், "அரசியல் கேள்விகள் எதுவும் வேண்டாம், இது கோவில், வழிபடும் இடம்.. விட்டுவிடுவோம்" எனக் கூறிவிட்ட்டு அங்கிருந்து புறப்பட்டார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான் ஓட்டுக்காகவும் அரசியலுக்காவும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கருத்தை கூறுவதாகவும், ஏற்கனவே பரமக்குடியில் நடந்த ஒரு சமூக தலைவரின் நிகழ்வில் பாண்டிய வம்சம் குறித்து ஒரு சர்ச்சை கருத்தை கூறியதாவும், தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பாண்டியர்கள் எனவும் முழக்கங்களை எழுப்பிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications