படுத்த படுக்கை.. ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பழ.நெடுமாறன் நெகிழ்ச்சி
மதுரை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை இன்று முதல்வர் ஸ்டாலின் மதுரையில் அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு, மதுரைக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மதுரை நாராயணபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், தேவர் ஜெயந்தியையொட்டி, மதுரைக்கு இன்று சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், நாராயணபுரம் பேங்க் காலனியில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.
#POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.
அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பேசிய பழ நெடுமாறன், 'முதல்வர் ஸ்டாலின் இன்று ஏகப்பட்ட வேலைகள், நிகழ்ச்சிகள் இருந்தும் கூட அதற்கு நடுவில் உடல் நலமின்றி இருக்கும் என்னை வந்து சந்தித்தது என்னுடைய உள்ளத்தை மிகவும் நெகிழ வைக்கிறது. 2002 ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் நான் இருந்தபோது வேறொரு போராட்டத்தில் ஸ்டாலினும், அவரது தோழரும் அன்றைக்கு கைது செய்து அதே சிறையில் கொண்டு வந்து வைத்தார்கள்.
ஒரே பிளாக்கில் நாங்கள் இருக்கக் கூடிய சூழ்நிலை. கிட்டத்தட்ட 15 நாட்கள் அங்கு தங்கியிருந்தார். பல்வேறு கட்டங்களில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அவர் என்மீது அன்பும், மதிப்பும் காட்டி இருக்கிறார். இந்த சூழலில் அவரும் சக அமைச்சர்களோடு என்னை வந்து சந்தித்தது ஆறுதலுக்குரியது. என்றும் மறக்க முடியாதவை. அவருக்கு என்றும் என்னுடைய நன்றி என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.












Click it and Unblock the Notifications