முதல்வர் ஸ்டாலினின் 20 கிமீ ரோடு ஷோ.. பளபளப்பாகும் தூங்காநகர் சாலைகள்.. மதுரை மக்கள் உற்சாகம்!
மதுரை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை வரவுள்ளார். மே 31ஆம் தேதி மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தப்பட உள்ள நிலையில், அதற்காக மதுரையின் முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுரை சாலைகள் பளபளப்பதாக மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 1ஆம் தேதி முதல்முறையாக நடக்கவுள்ளது. உத்தங்குடியில் நடக்கும் இந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதுமட்டுமல்லாமல் திமுகவின் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி-க்கள், முக்கிய பிரமுகர்கள் என 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர்.

சைவ, அசைவ விருந்து
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தை எந்த திமுகவினரும் மறக்கவே கூடாது என்பதற்கு ஏற்ப ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக மேற்கொண்டு வருகிறார். பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு சைவம் மற்றும் அசைவ விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சாலை சீரமைப்பு பணிகள்
அதேபோல் மதுரை மாவட்டம் முழுக்க 3 நாட்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களை அமைச்சர் மூர்த்தி புக் செய்து வைத்திருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 31ஆம் தேதி மாலை மதுரை வருகிறார். இதற்காக மதுரை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
20 கிமீ ரோடு ஷோ
திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்நாள் மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 20 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த உள்ளார். அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், காளவாசல், பைபாஸ் சாலை, ஆரப்பாளையம், புதிய ஜெயில் சாலை வழியாக சென்று மேலபொன்னகரத்தில் நிறைவடைய உள்ளது. அதன்பின் சர்க்யூட் ஹவுரில் இரவு தங்குகிறார்.
மாநகராட்சி பணிகள்
இந்த பகுதியில் உள்ள அத்தனை சாலைகளையும் சரி செய்யும் பணிகள், குப்பைகளை அகற்றும் பணிகள், குறிப்பாக மணலை அகற்றும் பணிகள் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே மதுரையில் சாலைப் பணிகள், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உற்சாகமான மதுரைவாசிகள்
சில இடங்களில் சாலைப் பணிகள் செய்யப்பட்ட பின், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனை மாநகராட்சி சார்பாக சரி செய்யப்பட்டு வருவதால், மதுரை மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பல மாதங்களாக மாநகராட்சியால் கண்டு கொள்ளப்படாமல் இருந்த சாலைகள் கூட முதல்வரின் வருகை காரணமாக சரி செய்யப்படுகிறது. இதனால் மதுரை சாலைகள் பளபளப்பதாக மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications