சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.. அலங்காநல்லூரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடங்கும் வீரருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று கூறியுள்ள ஸ்டாலின், ரூ.ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம், உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபின், அதற்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் வெல்லும் வீரர்களுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் தமிழக அரசு சார்பாக அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஜல்லிக்கட்டு வீரர்களின் கோரிக்கையாக நீண்ட நாட்களாகவே அரசுப் பணி வழங்க வேண்டும் என்று பேசி வருகின்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற அஜித் என்பவரும் இதே கோரிக்கையை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், சிறிது நேரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டார். அப்போது சிறப்பாக செயல்பட்டு மாடுபிடி வீரருக்கு மோதிரம் பரிசளித்தார்.
இதன்பின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்த மதுரை மண் என்பது வீரம் விளைந்த மண். அந்த மண்ணில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் போது, நமக்கும் வீரம் வருகிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், அறிவு வளர்ச்சிக்காக நூலகம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஏறு தழுவுதல் அரங்கமும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூரில் 2 புதிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி வெல்லும் மாடுபிடி வீரருக்கு அரசு வேலை அளிக்கப்படும். கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் உரிய அரசு பணிகளில் பணியமர்த்த வழிவகை செய்யப்படும். அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான உயர்தர பயிற்சி மையம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications