மாரத்தான் ஓடிய மாணவர் மயங்கி விழுந்து பலி.. மதுரையில் அதிர்ச்சி.. என்ன நடந்தது? டீன் பரபர விளக்கம்!
மதுரை: மதுரையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற தினேஷ் என்ற கல்லூரி மாணவர், மாரத்தான் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் ரத்த தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் பலி: இந்த மாரத்தான் போட்டி மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் தினேஷ், மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜா பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரையில் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார் மாணவர் தினேஷ்.
மாரத்தான் ஓடி முடிந்த சிறிது நேரத்தில், அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, மயங்கி விழவே, உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார் மாணவர் தினேஷ். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீன் விளக்கம்: இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்னவேல், "மதுரையில் இன்று காலை இரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர் தினேஷ், மாரத்தான் முடிந்து 1 மணி நேரத்திற்கு மேலாக சக கல்லூரி மாணவர்களுடன் இயல்பாகவே இருந்துள்ளார்.
அதன் பிறகே மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலை 8.45 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரின் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் மிகக்குறைவாக இருந்தது, சுய நினைவு திரும்பவே இல்லை. காலை 10.10 மணியளவில் அவருக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி 10.45 மணியளவில் உயிர் பிரிந்தது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications