எடப்பாடியால் தோல்வி? ஓபிஎஸ் எங்குமே நடமாட முடியாது! வேட்டியை மடித்து கட்டும் அதிமுக மாஜி! என்னாச்சு?
மதுரை: 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமான ஓபிஎஸ் குறித்து நான் பேசியதை இபிஎஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் தவறான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது எனவும், ஓபிஎஸ் தூண்டுதலால் இதுபோன்ற வீடியோ பரப்பப்படும் நிலையில், அவர் வெளியே நடமாட முடியாது என எச்சரித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் சக்தி மிகுந்த நபராக வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது கட்சி கரை வேட்டியை கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியை 5 ஆண்டுகள் நடத்த உறுதுணையாக இருந்ததற்காக துணை முதலமைச்சர் பதவி அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.
மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் வரும் காலங்களில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் கட்சியில் இடம் இல்லை என திட்டவட்டமாக கூறி வருகிறார், அதே நேரத்தில் ஓ.ன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை குரல்கள் அதிமுகவில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதற்கிடையே விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆர்பி உதயகுமார் எம்ஜிஆர், ஜெயலலிதா ஜெயித்த ஆண்டிபட்டியில் ஓ.பன்னீர்செல்வம் சதியால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற முடியாமல் போனது என பேசினார்.
இந்த நிலையில் குறித்து தான் ஆர்பி உதயகுமார் அப்படி பேசியதாக சமூக வலைதளங்களில் விடியோ ஒன்று வேகமாக பரப்பப்பட்டது. மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் லோகோ மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அந்த வீடியோ பரப்பப்பட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் தூண்டுதலால் தன்னை குறித்து அவதூறாக வீடியோ பரப்பப்படும் நிலையில், அவர் வெளியே நடமாட முடியாது என எச்சரித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "இ ராஜபாளையத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பங்கேற்று பேசினேன். அதில் 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமான ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதை இ.பி.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் தவறான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி எனக்கு கிடைத்துள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாத விஷக்கிருமிகள் இதுபோன்ற தவறான வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்கள். வீடியோவை ஒட்டி திரித்து தனியார் தொலைகாட்சியில் வந்தது போல ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள். அவதூறு வீடியோ தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து உள்ளோம். துரோகி ஒ.பி.எஸ் தூண்டுதலால் என்னை பற்றி அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வோம். தூண்டுகோலாக உள்ள பன்னீர் செல்வத்தின் வீட்டை முற்றுகையிட்டு, எங்கும் நடமாட முடியாத நிலையை அவர் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications