ஆட்சியர் அவமதித்துவிட்டதால் விருப்ப ஓய்வு பெற முடிவு- டீன் சுகந்தி ராஜகுமாரி அமைச்சருக்கு கடிதம்
மதுரை: ஆட்சியர் அவமதித்துவிட்டதால் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறவுள்ளேன் என விடுமுறையில் சென்றுள்ள டீன் சுகந்தி ராஜகுமார் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதினார்.
இதுகுறித்து மா.சுப்பிரமணியனுக்கு சுகந்தி எழுதிய கடிதத்தில் மே 19-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பொறுப்பேற்றேன். முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பணியாற்றினேன்.
மே 18 ஆம் தேதி மாலையில்தான் இடமாறுதல் உத்தரவு வந்தது. இரவில் மதுரை அழகர்கோவிலில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கி மறுநாள் காலை பணியில் சேர்ந்தேன். விருதுநகரில் குடியிருப்பு வசதி இல்லாததால் மாலை 4 மணிக்கு மதுரை வீட்டுக்கு வந்தேன். மாலை 5.29 மணிக்கு போனில் அழைத்த நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த் ஆட்சியர் கண்ணன் என்னை சந்திக்கவேண்டும் என கூறியதாக தெரிவித்தார்.

அவசர சந்திப்பா
மாலை 5.31 மணிக்கு ஆட்சியரை போனில் தொடர்பு கொண்டேன். அப்போது அவசர சந்திப்பா அல்லது பேரிடர் மேலாண்மை குறித்து பேச வேண்டுமா என கேட்டேன். அதற்கு அவர் மரியாதை நிமித்தமாக என்னை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். மதுரையில் இருப்பதாலும் தொடர் மழை பெய்ததாலும் மறுநாள் வந்து சந்திப்பதாக கூறினேன்.

மறுநாள் சந்திக்க
ஆனால் அவரோ இரவு 8 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என வற்புறுத்தினார். மூத்த வழக்கறிஞராக பணிபுரியும் என் கணவர் ஐசக் மோகன்லால் ஆட்சியரிடம் பேசினார். அவசர பணி என்றால் நானே காரில் அழைத்து வருகிறேன். மரியாதை நிமித்தம் என்றால் மறுநாள் சந்திக்க சொல்கிறேன் என தெரிவித்தார்.

ஆக்ஸிஜன்
மே 20 ஆம் தேதி மறுநாள் காலையில் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் முறைகேடு குறித்த விசாரணையில் ஈடுபட்டதால் அந்த பணி முடிந்ததும் ஆட்சியரை சந்திக்க முடிவு செய்தேன். ஆனால் அதற்கு முன் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த நபர் என்னிடம் நோட்டீஸ் கொடுத்தார்.

வீடியோ கான்பிரன்ஸ் வீடியோ
அதில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் 3 மணிக்கு நடத்திய வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங்கில் பங்கேற்காததால் உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தது. மே 19 காலை 4 மணி வரை மருத்துவமனையில் இருந்த போது வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங் குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை.

அரசு பணியாளர்
இதுதொடர்பாக ஆட்சியர் எனக்கு போனிலும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது அரசு பணியாளர் நடத்தை விதிகளை நான் மீறியதாக எப்படி சொல்ல முடியும்? என் கணவர் மிரட்டியதாக ஆட்சியர் கூறுகிறார். ஆனால் எனது கணவர் மறைமுகமாகவோ நேரடியாகவோ எந்த வித மிரட்டலையும் விடுக்கவில்லை.

ஆட்சியர்
கொரோனா சூழலில் ஆட்சியர் எங்களை போன்ற மருத்துவர்களின் சேவையை பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக அவமதித்து மனரீதியாக துன்புறுத்திவிட்டார். ஆட்சியரின் இத்தகைய செயலால் தொடர்ந்து டீனாக பணியாற்ற முடியாத சூழலில் விருப்ப ஓய்வு பெற நினைக்கிறேன் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications