அரசு புறம்போக்கு நிலங்களை பட்டா போடும் கும்பல்.. அதிகாரிகளை ஆடிப்போக வைத்த ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: சமீப காலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருவதால், பேராசைப் பிடித்த மனிதர்கள், வருவாய்த்துறை மற்றும் இதர அரசுத் துறைகளின் அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதும் அதிகரித்துள்ளது... ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த சையது அலி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "எங்கள் ஏரியாவில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதை திடீரென ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் ஏரியா மக்கள் அந்த பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பாதை ஆக்கிரிமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

சையது அலி தாக்கல் செய்திருந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமிநாராயணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும் போது "ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே நிறைய உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பு குழுவை அமைத்தது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சியரை நியமித்தது.இதற்கான மாநில வழிகாட்டுதல் குழுவில் தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள். இவர்கள் மாதம்தோறும் இந்த குழு கூடி, நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆக்கிரமிப்பு குறித்த புகார்களை விசாரிக்கிறார்கள். அந்த வகையில், பொது இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நோட்டீசை பெறுபவர்கள் தகுந்த அதிகாரி முன் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இந்த பூமி, மனித வாழ்க்கைக்கு அனைத்தையும் கொடுத்து வருகிறது. ஆனால் இது பேராசையை திருப்திப்படுத்த அல்ல. பேராசைக்காரர்கள் அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலை நிலங்களை ஆக்கிரமித்து, பொது நிலங்களைப் பயன்படுத்த, அடிப்படை உரிமைகளை மீறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுச் சொத்துக்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் மக்களின் நலனுக்காகப் பாதுகாக்கப்படுவதையும், பொது மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதையும் உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்.
இங்கு பெரிய அளவில் ஆக்கிரமிப்புகளை செய்பவர்களிடம் ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் பேராசைப் பிடித்தவர்கள், போலி ஆவணங்களை உருவாக்கி, அரசு சொத்துக்களுக்கு பட்டா வழங்கும் விபரீதமான சூழ்நிலையும் இருக்கிறது. சமீப காலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருவதால், பேராசைப் பிடித்த மனிதர்கள், வருவாய்த்துறை மற்றும் இதர அரசுத் துறைகளின் அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதும் அதிகரித்து வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் முறியடிக்கப்படுவதுடன், மக்களின் நலனுக்காக அரசு சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். தமிழக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை அபகரிப்பது திருட்டுதான். எனவே, இது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி மட்டுமல்ல, பிற சட்டங்களின் படியும் குற்றமாகும்.சமூகத்தில் செல்வாக்கு மிக்க சில நபர்களால் நிலத்தை அபகரிக்கும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதால், பொது மக்கள் அவதிப்படுகிறார்கள். அரசு உத்தரவின்படி, மாநில வழிகாட்டுதல் குழு மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கூடி, செயலாளர்கள் கூட்டத்துடன் பிரச்சினைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். புகார்கள் மீதான நடவடிக்கையை வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலோ, கடமை தவறினாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் தவறினால் மனுதாரர் மீண்டும் இந்த நீதிமன்றத்தை நாடலாம். அதன்படி மனுதாரர் தெரிவிக்கும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு சென்னை உயர்நீதிமனற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications