மத்திய அதிகாரியை மாநில அரசு விசாரிக்கலாம்! அமலாக்கத்துறை வழக்கை சிபிஐக்கு மாற்ற ஹைகோர்ட் மறுப்பு
மதுரை: அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், டிச.2ம் தேதி கைது செய்யப்பட்டார். சுரேஷ் பாபபு மீதான வழக்கு ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், இதே வழக்கை பிரதமர் அலுவலகம் மீண்டும் விசாரிக்க இருப்பதாக கூறி, இதிலிருந்து தப்பிக்க ரூ.2 கோடி வரை அங்கித் திவாரி லஞ்சம் கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மருத்துவர், தமிழ்நாடு லஞ்ச ஒழப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், லஞ்சம் பெற்றதாக அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து பிடித்திருக்கிறார்கள். அவரை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், மதுரை அமலாக்கத்துறை அலுவலத்திலும் திடீரென அதிரடி ரெய்டை மேற்கொண்டனர்.
சுமார் 13 மணி நேரமாக விடிய விடிய நடைபெற்ற ரெய்டில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக மத்திய அரசின் விசாரணை அமைப்பான அமலாக்கத்துறைதான், நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் ரெய்டு நடத்தி கெத்து காட்டி வந்தது. ஆனால் அமலாக்கத்துறையின் அலுவலகத்திலேயே புகுந்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது பெரும் விவாதங்களை கிளப்பியது.

இந்த சம்பவத்தையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது. அதில், "லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி மதுரை மண்டல அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அனுமதியின்றி அலுவலகத்திற்குள் புகுந்த 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்" என வலியுறுத்தியிருந்தனர். அதேபோல, அங்கித் திவாரி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "மத்திய அரசின் அதிகாரிகளை விசாரிக்க மாநில அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசு அதிகாரியை கைது செய்ததற்கு லஞ்ச ஒழிப்புதுறை மீது நடவடிக்கை கோருவது ஏற்கத்தக்தல்ல" என்கிற தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications