இந்த முறை திருப்பரங்குன்றத்தை விட்டுக் கொடுக்காத திமுக! அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்! பாஜக சமாளிக்குமா?
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் இந்த முறை திமுகவே போட்டியிடும் என சொல்லப்படுகிறது. மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்திற்கு பிறகு இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவும் பாஜகவும் ஆர்வம் காட்டி வருகிறது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் யார் போட்டியிட்டாலும் இந்த தொகுதியை தட்டி தூக்க திமுகவினர் கடுமையாக உழைத்து வருகிறார்களாம்.
மதுரையின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், சர்வதேச விமான நிலையம், காமராஜர் பல்கலைக்கழகம், வடபழஞ்சி ஐ.டி. பார்க் ஆகியவை அமைந்துள்ள பகுதியாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது. மேலும், 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு, தற்போது அதிவேகமாக கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையும் இத்தொகுதியில் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, அவனியாபுரம் ஆகிய முக்கிய பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இது மாவட்டத்தின் இரண்டாவது பெரிய சட்டமன்றத் தொகுதியாகும். தே.மு.தி.க. கட்சி துவங்கப்பட்டது உட்பட, பல அரசியல் கட்சிகளின் பிரமாண்ட மாநாடுகள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன. மேலும், தொடர்ச்சியாக இரண்டு முறை இடைத்தேர்தல்களைச் சந்தித்த தொகுதியாகவும் இது விளங்குகிறது.
கோரிக்கை என்ன
வைகை பாசனக் கால்வாய் அமைக்கப்படாதது, நறுமணத் தொழிற்சாலை நிறுவப்படாதது, பூக்களுக்கான குளிர்பதனக் கிடங்கு இல்லாமை, சர்வதேச நாடுகளுக்கான விமான சேவை விரிவாக்கம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இப்பகுதியில் நீண்ட காலமாக உள்ளன.
தொகுதியில் முக்குலத்தோர் அதிகளவாகவும், அதற்கு அடுத்த நிலையில் சவுராஷ்டிரா, முத்தரையர், கோனார், ஆதி திராவிடர் மற்றும் கிறித்துவ சமூகங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர்கள்
இந்தத் தொகுதியை பொருத்தவரை, மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கிருத்திகா பாண்டியன், போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுத்தாய் போட்டியிட்டு ராஜன் செல்லப்பாவிடம் தோல்வியடைந்தார்.
யார் போட்டி
இவரின் கணவர் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கிருத்திகா தங்கபாண்டியன், இத்தொகுதியில் தினசரி மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, 1 இலட்சம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், திமுகவைச் சேர்ந்த ஏர்போர்ட் பாண்டியனும் இந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். அது போல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்ற மணிமாறன், தற்போது திருமங்கலம் தொகுதியை குறி வைத்துள்ளாராம். எனவே திருப்பரங்குன்றம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. கிருத்திகாவுக்கு பொதுமக்களிடையே நற்பெயர் இருப்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள்
அதிமுகவைப் பொருத்தவரை, புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பாவே மீண்டும் களமிறங்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்ற மருத்துவர் சரவணனும் இத்தொகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே இந்தத் தொகுதியைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தீபத் திருவிழா பிரச்சனை
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா தொடர்பான பிரச்சினையில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வரும் பாஜகவும், இத்தொகுதியை குறிவைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் நபீன், அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நேரடியாக குரல் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் 'இந்து விரோத திமுக' என்ற பிம்பத்தை உருவாக்க, பாஜக நேரடியாக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் பேராசிரியர் சீனிவாசன் போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் வெல்வார்கள்
அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள இத்தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு அரசியலில் அதிகரித்து வருகிறது. பாஜக நேரடியாக களமிறங்கும் நிலை ஏற்பட்டாலும், அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிட்டாலும் , அவர்களை எதிர்கொண்டு வெற்றி பெற திமுக தயாராகி வருகிறது. எனவே, இத்தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கோ அல்லது புதிய வேட்பாளருக்கோ வழங்காமல், திமுக தானே நேரடியாக களமிறங்கும் என மதுரை கழக உடன்பிறப்புக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications