முக்குலத்தோர் வாக்குகளை அள்ள திமுக தீவிரம்! பிரச்சாரத்திற்காக சவுத்தில் சத்தமின்றி களமிறங்கிய நடிகர்
மதுரை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை வளைக்க திமுக மிகத் தீவிரமாக வியூகங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டது.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் சமுதாய அமைப்பினர் மூலம் முக்குலத்தோர் வாக்குகளை ஒரு வேளை பிரித்துவிட்டால் அது தேர்தல் முடிவுகளில் பாதகமாகவும் மாறலாம் எனக் கருதுகிறது திமுக.

இதனால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அப்படியே திமுகவுக்கு அள்ள என்னென்ன வழிகள் இருக்கிறது என்பது பற்றி ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பசும்பொன் கிராமத்திற்கு கடந்தாண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்தாண்டு அவரே நேரடியாக பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்றார். அதுமட்டுமல்ல முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தின் முன்பு 2 நிரந்தர மண்டபங்கள் கட்டித் தரப்படும் என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே திமுக சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவரும், நடிகருமான ஜெ.எம். பஷீர் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமான தேசியத் தலைவர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவர் அண்மையில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதற்காக மதுரையிலிருந்து பசும்பொன் நோக்கி காரில் சென்ற போது, முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் ஆரவாரத்துடன் கூடிய வரவேற்பை அளித்து திக்குமுக்காட வைத்துள்ளனர்.

மேலும், தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தங்கள் ஊர்களில் வந்து சமுதாய அமைப்பு ரீதியான கொடியை ஏற்ற வேண்டும் என திண்டுக்கல், மேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆர்வமுடன் பலர் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அவ்வாறு சென்ற இடங்களில் எல்லாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தான் நீங்கள் துணை நிற்க வேண்டும் என முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் மத்தியில் ஜெ.எம்.பஷீர் சைலண்ட் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இதன் மூலம் திமுக தலைமையின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 7 முதல் 8 மக்களவைத் தொகுதி வரை திமுக ஆதரவு பிரச்சாரத்திற்காக பஷீர் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications