வெளுத்து வாங்கும் மழை.. வைகையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்! மதுரை மக்களுக்கு எச்சரிக்கை
மதுரை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மதுரையில் இன்று கனமழை பெய்திருக்கிறது. எனவே, வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. வட தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே வெப்பம் குறைந்திருக்கிறது. அதேபோல அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. குறிப்பாக கோரிப்பாளையம் பாலத்தின் கீழ் தேங்கியிருக்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்கியுள்ளன. எனவே முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.
பாலத்தில் சிக்கிய வாகனங்களை காவல்துறையினர் மீட்டு வருகின்றனர். இந்நிலையில், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வைகை நதி தொடங்கும் தேனியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியுள்ளது.
எனவே அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மதுரை மாநகர் வைகை ஆற்று பகுதிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதுதான் கோரிப்பாளையம் பாலத்தின் அடியில் தேங்கிய மழைநீர் ஆற்றுக்க செல்லாததற்கு காரணமாகும்.
முன்னதாக இன்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில் அடுத்த சில நாட்களுக்கு தேனி மற்றும் மதுரையில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது,
"நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13ம் தேதி: ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14ம் தேதி: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15ம் தேதி: ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications