தந்தையின் உறுதி, தாத்தாவின் உழைப்பு.. உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன ஈவிகேஎஸ் இளங்கோவன்
மதுரை: தமிழ்நாடு மாநிலத்தின் துணை முதல்வராப் பொறுப்பேற்ற உதயநிதி துணிச்சல் மிக்கவர். தந்தையுடைய உறுதியும், தாத்தாவின் உழைப்பும் அவரிடம் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தது. அவ்வப்போது இது தொடர்பான தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் தரப்படும் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான நேற்றைய தினம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட, மனோ தங்கராஜ் உள்ளிட்ட 3 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

அதேநேரம் செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். மேலும், சிலரது துறைகளும் மாற்றப்பட்டு இருந்தது. திமுக தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி துணை முதல்வராக நியமிக்கும் அறிவிப்பும் அதில் இருந்தது. இது திமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் காங்கிரஸ் தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மறைந்த கோவிந்தராஜன் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் உதயநிதி. கலைத் துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சரான ஓராண்டில் சிறப்பாக பணி செய்தார்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை மிக்கவர். துணை முதல்வராக அவர் பதவியேற்றால் சிறந்த முறையில் பணியாற்றுவார். உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது தந்தை ஸ்டாலினின் உறுதியும், தாத்தா கலைஞரின் கடுமையான உழைப்பும் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்து தேர்தலின்போது இந்திய அளவில் எதிர்ப்பைக் கிளப்பியது. சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞர்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது குறித்து விமர்சனம் இரண்டு புறமும் இருக்கலாம். 471 நாள் சிறையில் ஜாமீன் கூட கொடுக்காமல், மத்திய அரசு பழிவாங்கும் செயலை செய்தது. உடல்நிலை சரியின்றி இதய பிரச்சனையில் இருந்த அவரை மத்திய அரசு வஞ்சித்தது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் சிறையில் அடைத்தது போன்று எதிர்க்கட்சியில் தலைவர்களை சிறையில் வைத்தால் அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறது மத்திய அரசு.
இந்திய மக்கள் ஒரு மனதாக மோடியை தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அந்த எண்ணம் மோடிக்கு புரிந்ததால்தான் அவரின் முகத்தில் உற்சாகம் கொஞ்சம்கூட இல்லை. வெளிநாடு செல்லும்போது மட்டும் பொதுமக்களைப் பார்த்து சிரிக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அனைத்து கட்சியினரின் விருப்பமும்தான். அது இப்போது சாத்தியம் இல்லை என்பது அனைத்துக் கட்சிகளும் சொல்லி இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினும் இது பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டணி முன்பை விட வலுவாக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications