விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரம்: பல்வீர் சிங்குக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு எப்போது?
மதுரை: விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அருண் குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற எனது பற்களை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உடைத்தார். என்னைப் போல் பலரின் பற்களை அவர் உடைத்துள்ளார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அம்பை காவல் நிலையத்தில் மார்ச் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் மார்ச் 11ஆம் தேதி இரவு 10 மணி வரை கண்காணிப்பு கேமரா காட்சிகளை எனக்கு வழங்கவும், வன்கொடுமை தடுப்பு வழக்கில் எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதா மற்றும் நெல்லை துணை ஆட்சியரின் விசாரணை அறிக்கையை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சம்பவ நாளில் அம்பை காவல் நிலைய சிசிடிவி கேமரா ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு: பின்னர், மனுவுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க தாமதம் செய்யப்படுவதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து வழக்கின் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, அம்பாசமுத்திரம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கியது தொடர்பான வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏஎஸ்பி பல்வீர்சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமார் உள்ளிட்ட14 போலீஸார் மீது, திருநெல்வேலி 1-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகை நகல்கள் வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து, இந்த வழக்கில் பல்வீர்சிங் உள்ளிட்ட 14 போலீசாருக்கும் ஜாமீன் வழங்கிநீதித் துறை நடுவர் திரிவேணி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications