திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: “உத்தரவு பிறப்பிக்க அவசரப்படுத்த வேண்டாம்” - 2 நீதிபதிகள் அமர்வு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டில் அரசு தரப்பில் திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடந்தது. வரும் 12 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை நிறைவேற்ற நீதிபதி உத்தரவின் பேரில் CISF மத்திய படைவீரர்கள் அங்கு வந்தனர். அவர்களை மலைக்குச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. 144 தடை அமல்படுத்தப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என நேற்று மாலையில் தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவிடம் முறையிடப்பட்டது.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, தங்களது கோரிக்கை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதியிடம் முறையிடலாம் என அறிவுறுத்தினார். அதன் பேரில் நேற்று இரவில் மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் தமிழக அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் மேல்முறையீட்டு மனு சம்பந்தமாக நாளை (அதாவது இன்று) காலையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்றைக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரணை நடந்தது. இரு தரப்பிலும் வழக்கின் நிலவரத்தைக் கேட்டனர்.
இந்த விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசுத் தரப்பு கோரிக்கை வைத்தது. கால அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது. மேலும், பல்வேறு தரப்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய விரும்புவதால், விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம், புதன்கிழமை வழக்குகள் விசாரிக்கப்படும். அதன் பின்னர் புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் வரவேண்டும் என்பதால் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்குமாறு தமிழக அரசு தரப்பு கோரியது. இதையடுத்து, அனைத்து தரப்பினரின் வாதங்களைக் கேட்டு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம், உத்தரவுகள் பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்து வரும் 12 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications