போலீசார் FIR போடாமல் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப் பஞ்சாயத்துக்கு சமம் - ஐகோர்ட் கிளை காட்டம்
மதுரை: புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் போலீசார் அழைத்து காவல் நிலையங்களில் பேச்சுவார்த்தை நடத்துவது, கட்டப் பஞ்சாயத்து செய்வதற்குச் சமமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. குற்றம் நடந்திருப்பது தெளிவாக தெரியவந்தால், காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'நான் தல்லாகுளம் பகுதியில் எல். கருப்பையா என்பவரிடம் இருந்து ஒரு குடியிருப்பு நிலத்தை விலைக்கு வாங்கினேன். இதற்கான பேசிய தொகையை செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு நான் அவரிடம் கொடுத்து வைத்திருந்த ஆவணங்களை தர கருப்பையா மறுத்து வருகிறார். மேலும் அதிக வட்டி கேட்டும் தொந்தரவு கொடுக்கிறார். இது குறித்து நான் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் இன்று (அக்டோபர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, "இது போன்று புகார்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிய வருகிறது. இது கட்டப் பஞ்சாயத்து நடத்துவதற்கு சமமாகும். ஆனால், அதே சமயம் முதற்கட்ட விசாரணைக்காக ஒரு நபருக்கு, காவல் அதிகாரி சம்மன் அறிவிப்பு அனுப்ப இயலாது.
ஒரு வழக்கின் முதற்கட்ட விசாரணையின் நோக்கம் என்பது புகாரை ஆராய்வது மற்றும் புகார்தாரரால் வழங்கப்பட்ட ஆதாரங்களை பார்ப்பது மட்டுமே. குற்றம் நடந்திருப்பது தெளிவாக தெரியவந்தால், காவல் துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்.
பிரிவு 173 (3) BNSS இன் கீழ் எந்தவொரு விசாரணையும், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) இன் ஒப்புதலுக்குப் பிறகு 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும், அந்த வழக்கின் விசாரணை முடிவும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்' என தெரிவித்தார். மேலும், மனுதாரர் சோமசுந்தரத்தின் மனு குறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications