மதுரை எல்ஐசி ஆபீஸ் 2வது மாடியில் நேர்மையான பெண் அதிகாரி.. இரவு 8 மணிக்கு சுற்றிலும் ஆவணங்கள்! பிறகு?
மதுரை: மதுரை எல்ஐசி கிளையில் ஏற்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் நடந்துள்ளது.. மிகவும் நேர்மையாக பணியாற்றி வந்த பெண் மேலாளர் எப்படி இறந்தார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டிருந்தபோதுதான், இப்படியொரு அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இது தொடர்பான விசாரணையை மதுரை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்... யாரிந்த பெண் அதிகாரி?
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் செயல்பட்டு வருகிறது எல்.ஐ.சி கிளை அலுவலகம்.. இங்கு 2-வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ம் தேதி இரவு சுமார் 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி (55) தீயில் உடல் கருகி உயிரிழந்தார். அவரது உடல் சம்பவ இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கல்யாணி நம்பியின் சடலத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்..
எல்ஐசி ஆபீஸ் 2வது மாடி
அதே நேரத்தில், அதே அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த ராம் (45) என்பவருக்கும் காலில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் இந்த சம்பவம் விபத்து என கருதப்பட்டது.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் கல்யாணி நம்பி தனது மகன் லட்சுமி நாராயணனுக்கு செல்போனில் பேசியதாக தகவல் வெளியானது. அந்த அழைப்பில், "பதற்றமாக இருக்கிறேன், உடனே போலீசுக்கு போன் பண்ணு" என்று சொல்லி அழைப்பு துண்டித்துள்ளது தெரியவந்தது.. இதனால் அவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் கல்யாண நம்பி மரணம் குறித்த விசாரணையை துவங்கினர்..
நேர்மையான அதிகாரி
மேலும் கல்யாணி நம்பியின் மகன் லட்சுமி நாராயணன் திலகர் திடல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் எல்.ஐ.சி அலுவலகத்திலும், அருகில் உள்ள இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, தீ விபத்து நடந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்த ராம் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவர் தீக்காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் உடனடியாக அவரிடம் விசாரிக்க முடியவில்லை. பிறகு அவரது உடல்நிலை சற்று மேம்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

முறைகேடுகளில் சிக்கிய ராம்
அப்போது ராம் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.,, அதாவது உயிரிழந்த கல்யாணி நம்பி கடந்த மே மாதம் திருநெல்வேலியில் இருந்து புரமோஷனில் மதுரை எல்.ஐ.சி அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் நேர்மையாகவும், கண்டிப்பாகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
அதே அலுவலகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வரும் ராம், நிறைய குளறுபடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.. பல முறைகேடுகளையும் செய்துள்ளதை கல்யாணி நம்பி கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கடந்த சில மாதங்களாக ராமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததாக தெரிகிறது.
சிக்கிய ஆவணங்கள்
சம்பவத்தன்று, ராம் அலுவலகத்தில் சில ஆவணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டிருந்தாராம்.. இதை பார்த்த கல்யாணி நம்பி பதறிப்போய், அதுகுறித்து ராமிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.. பிறகு உடனே தனது மகனுக்கு போன் செய்து போலீசாரை அழைக்க சொல்லி உள்ளார்..
இதனால் ஆத்திரமடைந்த ராம், கல்யாணி நம்பியின் மீது பெட்ரோலை ஊற்றி, அலுவலகத்தின் கதவை பூட்டிவிட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இதில் தீயில் சிக்கி கல்யாணி நம்பி கருகிவிட்டார்..
இந்த சம்பவத்தில் ராமின் காலிலும் பெட்ரோல் பட்டதால் அவர் தீக்காயமடைந்து வெளியே ஓடியுள்ளார். தீ 2ம் தளத்தில் பரவியதை பார்த்த பொதுமக்கள், காயமடைந்து கிடந்த ராமை மட்டும் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்... ஆனால் அந்த நிலையிலும் மாடியில் கல்யாணி நம்பி எரிந்து இருப்பதை ராம் யாரிடமும் சொல்லவில்லையாம்..
மாஜிஸ்திரேட் விசாரணை
இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, உயரதிகாரி கல்யாணி நம்பியை கொலை செய்ததாக ராமை திலகர் திடல் போலீசார் கைது செய்தனர். இப்போது அவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் மேஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
விபத்தாக கருதப்பட்ட இந்த சம்பவம் தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதால், மதுரை எல்.ஐ.சி அலுவலகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications