பிரியாணி, பரோட்டா வாங்கப்போறீங்களா.. இன்ப அதிர்ச்சி காத்திருக்குங்க.. அதுவும் இந்த ஹோட்டல்ல மட்டும்
மதுரை: பிரியாணி, பரோட்டா, சிக்கன்ரைஸ், வாங்கினால் முகக்கவசம், சானிடைசரை இலவசமாக வழங்குகி அசத்துகிறது, மதுரையை சேர்ந்த ஒரு உணவகம்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இதுவரை 8க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 147 சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெருவாரியான மக்கள் இதை சரியாக பின்பற்றுவதில்லை.

பரோட்டா, சிக்கன் ரைஸ்
இந்த நிலையில்தான், மதுரை மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் கே.சுப்பு என்ற ஹோட்டலின் உரிமையாளர் நவநீதன். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏதாவது ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்,பரோட்டா, சிக்கன்ரைஸ், பிரியாணி வாங்க வருபவர்களுக்கு முககவசம் மற்றும் சானிட்டைசர் இலவசம் என விளம்பரம் செய்தார் நவநீதன்.

முகக் கவசம், சானிட்டைசர்
தினசரி 500க்கும் மேற்பட்ட நபர்கள் சாப்பிடுவதற்கும், பார்சல் வாங்குவதற்காகவும் இந்த ஹோட்டலுக்கு வருவார்கள். எனவே, வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் வரும்போது முகக்கவசம் சானிடைசரும் வழங்கி வருகிறார். குறிப்பாக ஹோட்டலுக்கு ஒருவர் சாப்பிடவரும் போது முதலாவதாக அவரை வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கி வரவேற்று அவர் சாப்பிட்டு எழுந்து கிளம்பும் போது இரண்டு முக கவசம் சானிடைசர் இலவசமாக வழங்கிவருகிறார். இதற்காக,அவர் ஹோட்டலில் எந்த ஒரு விலை ஏற்றமும் செய்யவில்லை.

மதுரை மக்கள்
லாப நோக்கமின்றி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இதை அவர் செய்கிறார். இவருடைய இந்த நல்ல எண்ணத்தை மதுரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மாஸ்க் பரோட்டா
மதுரையில் ஏற்கனவே மாட்டுத்தாவணி பகுதியில் மாஸ்க் பரோட்டா, கொரோனா போண்டா என மக்களுக்கு நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து.மதுரை ஹோட்டலில் சானிடைசர் முககவசம் இலவசமாக வழங்கி வருவது அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications