ராமர் முகத்தை மூடியது சரியா? அவரை அவமானப்படுத்தலாமா? நியாயமா? கொந்தளிக்கும் வாசகர்கள்
மதுரை: சிறப்பு விருந்தினராக மதுரை புத்தகக் கண்காட்சிக்கு அழைக்கப்பட்ட விஜய் டிவி பிரபலம் ராமருக்கு எதிராக சர்ச்சை எழுத நிலையில், விளம்பர தட்டிகளிலிருந்த அவரது முகம் திடீரென்று மறைக்கப்பட்ட விவகாரம் பலரது கோபத்தைக் கிளப்பியுள்ளது.
மதுரை புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு எதிர்பார்ப்பை மீறி சில சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. முதலில் விஜய் டிவி பிரபலம் ராமர் பங்கேற்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவிப்புப் பலகை வைத்திருந்தனர். அதைப் பார்த்த சிலர், 'இவரை எல்லாம் புத்தகக் கண்காட்சிக்குச் சிறப்பு பேச்சாளராக அழைப்பது சரியா?' என்று ஃபேஸ்புக் பதிவில் விமர்சித்திருந்தனர். பபாசி அமைப்பையும் மதுரை புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைப்பு செய்த குழுவினரையும் போட்டு விளாசி எடுத்திருந்தனர்.

அதன் எதிரொலியாக நகைச்சுவை நடிகர் ராமரின் பெயர், விளம்பர தட்டிகளிலிருந்து உடனடியாக மறைக்கப்பட்டு உள்ளது. அவர் பேசுவதாக இருந்த நிகழ்ச்சியை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை பிரபலங்கள் எனப் பட்டியல் தயாரித்தால், அதில் ராமர் பெயர் கட்டாயம் இடம்பெறும். அதை வைத்தே விழா ஏற்பாட்டாளர்கள் அவரை அழைத்துள்ளனர். ஆனால், ஏதோ சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக அவர் பெயரை விளம்பர தட்டிகளிலிருந்து மறைத்துள்ளனர்.
ஒருவரை கௌரவிப்பதற்காக அழைத்துவிட்டு, பின்பு அவரை அசிங்கப்படும் நோக்கில் பட்டவர்த்தனமாகக் குறிப்பிட்ட ராமரின் பெயரையும் படத்தையும் மட்டும் மறைத்து தட்டியை வைப்பது எந்த வகையில் நியாயம்? இதனால் குறிப்பிட்ட சிறப்பு அழைப்பாளரான ராமரின் மனநிலை எந்தளவுக்குப் பாதிக்கப்படும்? அதை ஏன் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உணரவில்லையா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
சமூக வலைத்தளத்தில் யாரேனும் எதாவது எழுதிவிட்டால், அதைக் குருட்டு நம்பிக்கையோடு அப்படியே ஏற்றுக் கொள்வது சரியா என்றும் கேள்வி எழுந்துள்ளது. நேரடியாகப் புத்தகக் கண்காட்சி அரங்கிற்குள் சென்று நாம் பேசிய போது பலரும் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நம்மிடம் பேசிய ஒரு மிகப்பெரிய பதிப்பாளர், "இது எல்லாம் சில்லறை தனமான சர்ச்சைகள் என்றார். கூடவே ஒரு புத்தகக்கண்காட்சி என்றால் அனைவருக்கும் பொதுவான இடத்தைப் பகிர்ந்து அளிக்கவேண்டும். எழுத்தாளர் சங்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே எழுத்தாளர் இல்லை. இடதுசாரி, வலதுசாரி, ஆன்மிகம், பகுத்தறிவு எனப் பல் தரப்பு கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால், அப்படி நடப்பதில்லை என்றார்.
பெரிய பதிப்பகங்கள் என்று பார்த்தால் ராமகிருஷ்ண மடம் இருக்கிறது. அலயன்ஸ் பதிப்பகம் இருக்கிறது. கண்ணதாசன் பதிப்பகம் உள்ளது. அதிக வாசகர்களைக் கொண்ட பதிப்பகங்கள் யாரும் இந்தக் கண்காட்சியில் யாரை அழைக்கிறார்கள்? யாரைப் பேச வைக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்ளாமல் பெருந்தன்மையாக விட்டுவிடுகிறார்கள். சொல்லப் போனால் அதிக கூட்டம் இவர்களின் கடைகளுக்குத்தான் வருகின்றன.
ஆனால், 25 வாசகர்களைத் தாண்டாத பதிப்பாளரின் ஆதிகத்திற்குத் தக்க பபாசி வளைந்து போகிறது. பெரிய பதிப்பகங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் அவ்வளவுதான்" என்கிறார். இதேபோல பலரும் ராமருக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்க முடிந்தது. "ராமர் மதுரைக்காரர். அவர் இங்கே விஓ ஆக வேலைப் பார்க்கிறார். இந்த நிகழ்ச்சியை வருவாய்த்துறை சார்பான அதிகாரிகள்தான் ஒருங்கிணைத்தார்கள். அதில் உள்ள யாரேனும் ராமரைப் பரிந்துரை செய்திருக்கலாம். அவர் யார் என்பது முக்கியம் இல்லை. அவர் என்ன பேசுகிறார் என்று பார்த்துத்தான் விமர்சிக்க வேண்டும். அதுதானே சரி" என்கிறார் இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்த பேராசிரியர் முத்து.
ஃபேஸ்புக்கில் யாத்ரா நீலா என்பவர் ராமர் எந்தளவுக்குப் புத்தகப் பிரியர் என்பதை விளக்கி எழுதி இருக்கிறார். முகமது சல்மான் என்பவர் ராமரை ஆதரிப்பவர்களைக் கிண்டலடித்து ஒரு பதிவை போட்டுள்ளார். ராமருக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் பலர் கண்மூடித்தனமாக அவரை நிராகரிப்பதை அவர்களின் பதிவின்மூலம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப் போனால் ஏதோ ராமர் பங்கேற்றால் புத்தகக் கண்காட்சியின் புனிதத் தன்மையே கெட்டு விடும் என்பதைப் போல எழுதி உள்ளதுதான் வேடிக்கை. மாரி எஸ் என்பவர் எம்பி சு. வெங்கடேசன் கடந்த ஆண்டு சொன்ன பிறகே ராமர் விஓ அதிகாரி எனப் பலருக்கும் தெரிந்தது. அவருடைய டிவி நிகழ்ச்சியை வைத்து அவரை பேசக் கூடாது எனச் சொல்வது முட்டாள் தனம் என்றும் இவர் எழுதி இருக்கிறார். இளங்கோவன் கீதா என்பவர் ராமர் மீதான தூய்மைவாத கருத்துகளைப் பற்றி எரிச்சலாக எழுதி இருக்கிறார்.
கவிதா ராஜமுனீஸ் என்பவர், "அறிவு சார்ந்த தளத்தில் ராமருக்கு என்ன வேலை என்ற கேள்வியை வாசிக்கும் சாமானியன் அனைவருமே ஆமா நமக்கென்ன வேலை எனத் தவிர்த்துவிட்டால் புத்தகக் கண்காட்சியில் அறிவாளிகள் என்று சொல்லிக்கொண்டு சிலர் மட்டுமே உலவக்கூடும். சாமானிய மனிதனுக்கு அங்கு வேலையே இல்லை. சாமானியன் உள்ளே நுழைய முடியாத எந்த துறையும் அவசியமற்றதே.. அவன் மீதான சரி தவறுகளைப் பேசலாம்... வரவேக்கூடாது பேசவேக் கூடாது என்பதெல்லாம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த,வளர்க்கும் மதுரைக்கு அழகல்ல" என்கிறார்
"ராமர் அழைப்பு விவகாரம் பற்றி எழுதியவர்கள் யாரும் பெரிய அறிஞர்கள் இல்லை. 10 நிமிடம் கூட மக்களை ஈர்க்கும்படி பேசத் தெரியாதவர்கள். அவர்களை அழைத்துப் பேச வைத்தால் இருக்கும் கூட்டமும் கலைந்துவிடும். யாரும் இல்லாத கடையில் பிறகு எல்லோரும் டீ ஆற்ற வேண்டியதுதான்" என்கிறார் ஆங்கில புத்தகங்களைப் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் பதிப்பக ஊழியர் ஒருவர். இதில் வாசகர்கள் என்ற அடையாளத்துடன் உள்ளவர்கள் ராமரை ஆதரித்துப் பேசுகிறார்கள்.

எழுத்தாளர் என சொல்லிக் கொள்பவர்கள், சமூகநீதி, மானுட தர்மம் என்று கருத்துச் சொல்லும் பலர் ராமரை இழிவாக எழுதி இருக்கிறார்கள். அதுதான் வேதனையாகச் செய்தியாக உள்ளது. ராமர் சர்ச்சை போலவே பள்ளி மாணவிகள் சாமி ஆடிய விசயமும் சர்ச்சையானது. அதைப் பற்றி புத்தகக்கண்காட்சியில் கடை போட்டுள்ளவர்களிடம் பேசும்போது பலரும் மதுரை வீரம் மதுரை மண்ணின் அடையாளம். அதை ஒரு நிகழ்ச்சியாக வைத்தபோது அந்த இசையைக் கேட்டு மாணவிகள் யதேச்சையாக சாமி ஆடினார்கள். அதை உடனே வீடியோ போட்டு சர்ச்சை எழுப்புகிறார்கள். இந்த பின்னணியில் இருப்பவர்களின் நோக்கம் என்ன என்பது தெரியும் என்கிறார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ராமரை சந்தித்த எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவரது ஃபேக்புக் பதிவில், "கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னதிரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன்" என்று பெருமையாக எழுதி இருந்தார். அவர் இருக்கும் அமைப்பைச் சேர்ந்த சிலர்தான் ராமரை அழைக்கவே கூடாது. அதனால் அசிங்கப்பட்டு விட்டது விழா என்று இப்போது சர்ச்சை கிளப்பி வருகின்றனர். அதுதான் மிகப்பெரிய முரண்பாடாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications