யூகலிப்டஸ் மரங்கள் நிறைய தண்ணீரை உறிஞ்சும் என்பது கட்டுக்கதையாக இருக்கும்.. உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமாக நாங்குநேரி தாலுகா தென்குளம் பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கக் கோரி கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், யூகலிப்டஸ் மரங்கள் நிறைய தண்ணீரை உறிஞ்சும் என்பது கட்டுக்கதை என்றே தோன்றுகிறது என கருத்து தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமாக நாங்குநேரி தாலுகா தென்குளம், பருத்திப்பாடு கிராமங்களில் சுமார் 1,700 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன.

இந்த நிலங்களில் இதில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு 2016-ம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொதுவாகவே நாங்குநேரி தாலுகா வறட்சியான பகுதியாகும். அங்கு பெரும் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்களை வளர்த்தால், தண்ணீர் பற்றாக்குறையை மக்கள் எதிர்கொள்வார்கள். எனவே குத்தகையை ரத்து செய்து மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காகித நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், எம்.பி.செந்தில் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் வாதிடும் போது, காமால்டுலென்சிஸ், டெரிடிகார்னிஸ் என 2 வகையான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. சமவெளிகளில் இந்த மரங்களின் வேர்கள் 3 மீட்டர் ஆழத்துக்கு மேல் செல்லாது. மேலும் மற்ற வகை மரங்களை விட குறைவான தண்ணீரையே உறிஞ்சும். ஆனால் இந்த மரங்கள் அதிக தண்ணீர் உறிஞ்சுகின்றன என வதந்தி பரப்பப்படுகிறது.
பருத்தி, காபி, வாழை, சூரியகாந்தி, நெல், குதிரைவாலி, பட்டாணி, சோயா பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை காட்டிலும் யூகலிப்டஸ் மரங்கள் குறைந்த தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆராய்ந்து அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் முறையான அனுமதியை பெற்று, அதன்பின் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், நாங்குநேரி தாலுகா முழுவதும் பாதுகாப்பான மண்டலமாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அது வறட்சியான பகுதியாக காட்டப்படவில்லை. குத்தகை வழங்கியதில் எந்த விதிமீறலும் நடக்கின்றன. யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லை என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.
விசாரணை முடிவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், யூகலிப்டஸ் மரங்களை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்கப்படுகிறது. மேலும் யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என டேராடூன் வன ஆராய்ச்சி மையமும் தெரிவித்திருக்கிறது. மலைகளில் வளர்ப்பதை விட, சமவெளிகளில் யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் பெரும் தீங்கு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
உண்மையில் இவை மற்ற பயிர்களை விட குறைந்த தண்ணீரையே பயன்படுத்துகின்றன. இதனை தேசிய பசுமை தீர்ப்பாய தீர்வுகளும் உறுதிப்படுத்தி உள்ளது. எனவே, யூகலிப்டஸ் மரங்கள் நிறைய தண்ணீரை உறிஞ்சுபவை என்பது, ஒரு கட்டுக்கதையாக தோன்றுகிறது. இந்த மரங்களை வளர்ப்பதால் கோவிலுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. சூழலியல், சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். அதே நேரத்தில் நிலையான வளர்ச்சியையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.
அந்த வகையில் 2 வகையான யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் தீங்கு என்பதை மனுதாரர் தரப்பில் நிரூபிக்கவில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், எதிர்காலத்தில் சமவெளிப் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கத் திட்டமிட்டால், முறையாக ஆய்வு செய்த பின்னரே உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications