மதுரையில் பிரம்மாண்டம்.. கலைஞர் நூற்றாண்டு நூலகம்.. 4 லட்சம் புத்தகங்களுடன் என்னென்ன சிறப்புகள்
மதுரை: தமிழக அரசு சார்பில் மதுரையில் பிரமாண்டமாக 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் மற்றுமொரு அடையாளமாக திகழப்போகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில், மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கான அரசாணை பள்ளிக்கல்வித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

சென்னை கோட்டூர்புரத்தில் 2010ஆம் ஆண்டு பிரமாண்டமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அதைப்போலவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேசத் தரத்தில் நூலகம் மதுரையின் மற்றொரு அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஆரம்பத்தில் 70 கோடிக்குத் திட்டமிடப்பட்டு பின்பு 99 கோடியாக உயர்த்தப்பட்டு இறுதியாக தற்போது 134 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் இந்த நூலகத்தின் மூலம் பயன்பெறலாம். நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.
முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது. இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டுரைகளும் நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன்கூடிய ஆங்கில நூல் பிரிவும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்படச்சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜூலை 15ஆம் தேதியன்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. அது போல கலைஞர் நூற்றாண்டு நூலகமும் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழப்போகிறது.












Click it and Unblock the Notifications