அப்படிப்போடு! 100 நாட்களில் இரண்டரை லட்சம் பேர்!.. கலைஞர் நூலகம் சாதனை..
மதுரை: இந்த திராவிட மாடல் ஆட்சி மதுரை மக்களுக்குக் கொடுத்த மாபெரும் பரிசு கலைஞர் நூற்றாண்டு நூலகம். கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு இதுவரை இரண்டரை லட்சம் பேருக்கு மேல் வருகை தந்துள்ளனர்.
மதுரையைப் போன்ற ஒரு ஊரில் இவ்வளவு மக்கள் ஒரு நூலகத்தைப் பார்க்கக் குவிந்திருப்பது மாபெரும் சாதனை என்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

இந்த 100 நாள் சாதனையைக் கொண்டாடும் விதமாக, பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நூலகத்தைச் சுற்றி வலம் வந்திருக்கிறார். அதற்கான ஏற்பாட்டை 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சி செய்துள்ளது.
அமைச்சருடன் ஒரே வாகனத்தில் மாணவர்கள் பயணித்துள்ளனர். இந்தப் பயணத்தின் போது அன்பில் மகேஸைப் பார்த்து ஒரு மாணவன், 'உங்கள் நண்பர் உதயநிதி விளையாட்டு அமைச்சராக இருக்கிறார். நீங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கிறீர்கள். உங்கள் நட்பு பற்றிச் சொல்லுங்கள்?' என்று கேட்க, உடன் பயணித்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ், "என் தாத்தாவும் கலைஞரும் நண்பர்கள். என் அப்பாவும் முதல்வர் ஸ்டாலினும் நண்பர்கள். இப்போது நானும் உதயநிதியும் நண்பர்கள். மூன்று தலைமுறை நட்பு.
அவர் விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக வந்தது எனக்கு நல்லது. பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களைக் கேட்டு உடனடியாக வாங்கிக் கொள்ளலாம். பல விதங்களில் விளையாட்டுத்துறை கல்வித்துறையோடு இணைந்துள்ளது.

முன்பு பள்ளிக்கல்விக்கும் விளையாட்டுத்துறைக்கும் ஒரே அமைச்சர்தான் இருந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் அதைத் தனித்தனி துறையாகப் பிரித்தார்" என்று மிகப் பொறுமையாகப் பதிலளித்தார்.
மேலும் அவர் அந்தப் பயணத்தில் கலைஞர் நூலகம் உருவான சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

"கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த 1.07.23 அன்று திறந்துவைக்கப்பட்டது. அன்று காமராஜர் பிறந்தநாள். அதை 'கல்வி வளர்ச்சி நாள்' என்று அறிவித்ததே முன்னாள் முதல்வர் மு கருணாநிதிதான். அவர் உயிருடன் இருந்தபோது அண்ணா பெயரில் ஒரு நூலகத்தைத் தொடங்கினார்.
இன்றைக்கு உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின், மதுரையில் கலைஞரின் பெயரில் ஒரு நூலகத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார்" என்று தன்னுடன் வந்திருந்த பிள்ளைகளுக்கு வாசலில் உள்ள கலைஞர் சிலையைச் சுட்டிக் காட்டி வகுப்பெடுத்து விட்டு உள்ளே நுழைந்தார்.

"இந்த இடத்தைத் தேர்வு செய்வதற்காக வந்து பார்த்தோம். அப்போது இங்கே சின்ன கட்டடம் ஒன்று மட்டும் இருந்தது. அன்று இரவே முதல்வர் ஸ்டாலினை அழைத்து வந்து காட்டி, விளக்கினோம்.
அப்போது இருட்டி விட்டது. அதன்பிறகு விளக்குகளைக் கொண்டுவந்து பொருத்தி, அனைத்தையும் சுற்றிக் காட்டினோம். அந்த நாளை என்னால் என்றும் மறக்கவே முடியாது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வ வேலு இரவு பகல் பார்க்காமல் முழுமையாக இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பள்ளிக்கல்வித்துறையோடு சேர்ந்து, பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். எங்களுக்கு என்னென்ன வேண்டும் எனக் கேட்டுக் கேட்டு ஒவ்வொன்றாகச் செய்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இல்லாத பல புதிய வசதிகளைச் செய்து தர நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதை முழுக்க செய்து கொடுத்தார்.

அதன்பின்னர் முதல்வர் இதில் முழுக் கவனத்தைச் செலுத்தி, வேகப்படுத்திக் கொண்டே இருந்தார். பொதுப்பணித்துறை கட்டிடப் பணிகளை வேகமாக முடிக்க முடிக்க, எங்களை அழைத்து என்ன நூல்கள் வாங்கப் போகிறீர்கள்? என்னென்ன நூல்களைத் தேர்வு செய்திருக்கிறீர்கள்? என விடாமல் விசாரித்துக் கொண்டே இருந்தார். அவரது வேகம்தான் இந்த நூலகத்தை இவ்வளவு விரைவாகக் கட்டி முடிக்க உதவியது" என்றவர் கொஞ்சம் நேரம் அதிகாரிகளை விசாரித்துவிட்டு, மீண்டும் தொடர்கிறார்.
"இந்த நூலகத்தைக் கட்டும்போதே தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் பயன்படும் என்று சொன்னோம். நாங்கள் சொன்னதைப் போலவே மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இந்த நூலகம் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.

இதுவரை இரண்டரை லட்சம் பேர் வருகை தந்திருக்கிறார்கள். 100 நாட்களில் இந்தளவுக்கு மக்கள் வந்திருக்கிறார்கள் என்றால் சாதாரண விசயம் இல்லை. ஒரு நூலகத்தைப் பார்க்க, வெளியூர்களிலிருந்து இவ்வளவு கூட்டம் வருவது வியப்பான விசயம் மட்டுமல்ல; சாதனையான விசயமும்கூட
இந்த நூலகத்தின் தரைதளத்தில் கலைக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூடவே மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு செயல்படுகிறது. அதற்கு மெய்புல அறை கூவலர் பிரிவு என்று அழகிய தமிழில் பெயர் வைத்துள்ளோம். போட்டித் தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை ஒலி வடிவில் வாங்கி வைத்துள்ளோம். அதை அங்கேயே உள்ள கணினியில் போட்டுக் கேட்க ஏற்பாடுகள் செய்து தந்துள்ளோம். அவர்களுக்கு என்று தனி வசதிகள் கொண்டு இருக்கைகளை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

கலைக்கூடப் பிரிவில் மதுரை மாநகரம் என்பது எப்படி இருந்தது? நமது பண்பாடு என்ன? என்பதை அப்படியே புகைப்படங்களாகக் காட்சிப் படுத்தியுள்ளோம். இங்கே வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பல லண்டனிலிருந்து வாங்கி இருக்கிறோம். அந்தப் படங்கள் நம்மிடமே இல்லை. ஆகவே அதனை வாங்கி, பெரியதாக்கி மாட்டி வைத்துள்ளோம்.
அதைப்போல மரச்சிற்பங்கள் வைத்திருக்கிறோம். காரைக்குடி போன்ற பழைய பண்பாட்டு அடையாளங்களைப் பேசும் பிரத்தியேகமாக விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம். இப்படிக் கலை மற்றும் அறிவு சார்ந்த ஒரு களத்தை நாம் ஏற்படுத்தித் தரும்போது, நம் இளைய தலைமுறை அதில் கவனம் செலுத்துவார்கள்.

அப்படியான வசதிகள் இல்லாதபோது அவர்களின் எண்ணம் திசைதிருப்பப்படுகிறது. அதைத் தடுக்க வேண்டும். அதற்கு வெறும் அறிவுரை சொன்னால் போதாது. அதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இப்படி இந்த நூலக உருவாக்கத்திற்குப் பின்பாகப் பல்வேறு சிந்தனைகள் ஒளிந்துகொண்டுள்ளது.
முதல் தளம் என்பது குழந்தைகள் பிரிவுக்கானது. இங்கே உள்ள இருக்கைகள் எல்லாம் சாதாரண மாதிரி இருக்காது. அ, ஆ, இ, ஈ என்ற தமிழ் எழுத்துகள் வடிவிலேயே இருக்கைகளை அமைத்துள்ளோம். அறை முழுக்க கலர்ஃபுல் ஆக இருக்கும். ஒளி விளக்குகள்கூட குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் அமைத்துள்ளோம்.

டிஜிட்டல் வடிவில் தொடு திரை ஒன்றும் உள்ளது. அதில் நீங்கள் மனித உடலில் இயக்கத்தை அறியலாம். உறுப்புகளைத் தனித்தனியாகப் பிரித்து அறியலாம். குழந்தைகள் இதை விரும்பி பார்க்கிறார்கள்.
இங்கே எழுதி பழக டிஜிட்டல் திரையும் உள்ளது. மாணவர்கள் அதில் எழுதிப் பழகலாம். அந்த அனுபவம் சிறப்பாக இருக்கும். ஹோம் தியேட்டர் உள்ளது. அதில் கார்ட்டூன் அறிவியல்பூர்வமான விசயங்களைப் படங்களைப் பார்க்கலாம்.
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இப்படி ஒரு அரங்கு உள்ளது இங்கு மட்டும்தான். அதைப் போல டிஜிட்டல் திரை மீது நடக்கலாம். அதில் ஒரு கடல் உயிரினங்களின் உயிரியல் அனுபவத்தைக் கொண்டுவந்துள்ளோம்.
இங்கே பிள்ளைகள் உள்ளே வந்து பார்க்கும்போது அது இன்னொரு வகுப்பறை மாதிரி இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நான் சான்பிராசிஸ் கோ போய் இருந்தேன். அங்குள்ள நூலகத்தைப் பார்த்தேன். அதிலிருந்து சில விசயங்களை எடுத்துக் கொண்டோம். ஆனால், அந்த நூலகம் நம்மைவிட மிகச் சிறியது. இவ்வளவு வசதிகள் நிறைந்ததல்ல" என்கிறார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications