கார்த்திகை தீப திருவிழா தமிழகம் முழுவதும் கோலாகலம்..லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை: கார்த்திகை தீப பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோயில் பொற்றாமரை குளம் மற்றும் அம்மன், சுவாமி சன்னதி உள்பட கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. வீடுகள் தோறும் மக்கள் விளக்கேற்றி இறைவனை வழிபட்டனர்.
ஐப்பசி மாதம் தீபாவளி திருவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதுபோல கார்த்திகை தீபத்தை தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாகவே கொண்டாடி வருகின்றனர். கார்த்திகை மாத பவுர்ணமி நாளில், வீடுகளிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதற்கு "கார்த்திகை விளக்கீடு" என்று பெயர். மாலை வேளைகளில் வீடுகளிலும் வீட்டுக்கு வெளிப் புறங்களில் வீட்டு முற்றங்களில் மாடங்களிலும் விளக்கேற்றிக் கொண்டாடப்படும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நேற்றைய தினம் வீடுகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை மலை மீது இன்று மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் மக்கள் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டனர்.
கார்த்திகை தீபம்: ஒளியேற்றுங்கள் வழி கிடைக்கும்..இன்று இதை செய்தால் தலைமுறைக்கும் செல்வம் பெருகும்

கார்த்திகையில் தீபம் ஏற்றுவது ஏன்
ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். ஐப்பசி அமாவாசையில் அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன் அவரோடு இருப்பார். நீசம் பெறும் அந்த சூரியன், பலம் பெறுவதற்காக நாம் தீபத்தை ஏற்றி பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். கார்த்திகை மாதத்தில் சூரியன் தன்னுடைய நீச ராசியை விட்டு நட்பு ராசியான விருச்சிகத்தை அடைகிறார். அவர் விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் மாதமே கார்த்திகை மாதம். ரிஷப ராசியில் உச்சமடையும் சந்திரன் விருச்சிக ராசியில் நீசம் அடைவார். சூரியன் விருச்சிக ராசியில் இருக்கும் நாளில் சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெற்று ஒளிரும் நேரத்தில் தீப திருவிழா கொண்டாடுகிறோம். இதன்மூலம் மனோ காரனாகிய சந்திரன் இருள் விலகி பிரகாசிக்கிறார்.

மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.திருவிழாவின் 5ஆம் நாளான நேற்று இரவு, கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

லட்ச தீபம்
மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று இரவு மீனாட்சி கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. பொற்றாமரை குள படிக்கள் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. இதே போல தமிழகம் முழுவதும் முக்கிய ஆலயங்களில் தீப திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.

வீடுகளில் ஒளிர்ந்த தீபங்கள்
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் தங்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் விளக்கேற்றி வழிபட்டனர். தினம் தினம் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்ட மக்கள் இன்று தலைவாசல், முற்றம், சமையல் அறை, தோட்டங்களில் விளக்கேற்றி இறைவனை ஜோதி வடிவத்தில் வழிபட்டனர்.

ஜோதியாய் ஒளிர்ந்த சிவபெருமான்
கார்த்திகை தீப திருவிழா கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாய் இறைவன் காட்சி தந்த நாள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை உமாதேவியார் சிவனின் கண்களை விளையாட்டாக மறைக்க பிரபஞ்சமே இருட்டில் தவித்தது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் இருந்தன. அகில மாதாவாகிய தானே இப்படிப்பட்ட தவறு செய்து விட்டோமே என்று உமாதேவி வருந்தினார். தான் பாவம் செய்து விட்டதாகக் கருதி அதற்கு பிராயசித்தத்தைத் தேடி காஞ்சி புரத்தில் சிவபெருமானை நோக்கி தவத்தில் இருந்தார். இறைவன் பார்வதி தேவிக்கு காட்சி அளித்தார்.

கார்த்திகை பவுர்ணமி
உமாதேவியாரை திருவண்ணாமலைக்கு வரும்படியாக அருள்புரிந்தார். உமாதேவியாரும் அண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில் தவம் செய்தார். விருச்சிக மாதம் திருக்கார்த்திகை பவுர்ணமி நாள் அன்று இறைவன் தேவிக்கு காட்சியளித்து இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார். அந்த தினமே திருக்கார்த்திகை தினமாக கொண்டாடப்படுகிறது.