கீழடி டு இங்கிலாந்து.. சிடி ஸ்கேனில் சென்ற மண்டை ஓடு.. முகம் வடிவமைக்க இவ்வளவு வேலையா
மதுரை: கீழடியில் 2,500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் முக அமைப்பு தொடர்பான படத்தை இங்கிலாந்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கீழடியில் கிடைத்த மண்டை ஓட்டில் இருந்து, அவர்களின் உருவத்தை எப்படி வடிவமைத்தார்கள் என்று அந்த பணியின் அனுபவத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் குமரேசன் பகிர்ந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் வருடம் தொடங்கி 10 வருடங்களுக்கு மேலாக தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆய்வு அரசியல் களத்திலும் விவாதமாகியுள்ளது. இந்நிலையில் 2,500 வருடங்களுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த மனிதர்களின் முகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி." என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தன் எக்ஸ் தளத்தில், "சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல் வழி நிறுவப்பட்ட சான்றாக கீழடியில்." என்று பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். மக்களிடமும் இது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் மகிழ்ச்சியுடன் இந்தப் படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது உருவான விதம் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மரபணுத்துறை பேராசிரியர் குமரேசன், "கீழடி கொந்தகை அருகே 50 ஆண்களின் எலும்பு துண்டுகள் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 3-4 வருடங்களாக அந்தப் பணிகள் நடைபெற்றன. அதில் 10 மண்டை ஓடுகளில் சில பாகங்கள் இருந்தன. முக்கியமாக 2 மண்டை ஓடுகள் 70 சதவீதம் விதைவில்லாமல் இருந்தது.
இதை அடிப்படையாக வைத்துதான் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அந்த காலத்து மக்களின் முகம் எப்படி இருந்தது என்று கண்டறிய முடியும். 2டி மற்றும் 3டி தொழில் நுட்பத்தில் முக மறுசீரமைப்பு (facial reconstruction) செய்ய முடியும். லண்டனில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தில் ( John moores university) இதற்கென்று சிறப்பு ஆய்வகம் ஒன்று உள்ளது.
அங்கு தொல்லியல் மற்றும் தடயவியல் துறைகளின் பயன்பாட்டுக்காக மண்டை ஓடுகள் மூலம் முகம் மறுசீரமைத்துக் கொடுக்கும் பணிகளை செய்து வருகிறார்கள். இங்குள்ள மண்டை ஓடுகளை சிடி ஸ்கேன் செய்து அவர்களுக்கு டிஜிட்டல் ஃபைலாக அனுப்பினோம். அவர்கள் அதை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் இதை வடிவமைப்பு செய்துள்ளனர்.
இதில் இரண்டு விதமான சவால்கள் உள்ளன. நம்மிடம் மண்டை ஓடு மட்டும் தான் இருக்கிறது. தசையே இல்லை. மனித முகத்தில் லட்சக்கணக்கான புள்ளிகள் உள்ளன. தசையில் எவ்வளவு அடர்த்தி இருக்கும் என்கிற விபரம் நமக்கு தெரியாது. அதற்கு அவர்கள் பல்வேறு தரவுகளை ஆராய்ந்து தசையின் அடர்த்தியை கண்டறிந்துள்ளனர். முகத்தின் நிறம், முடி குறித்தும் ஆய்வு செய்து, தற்போதுள்ள மனிதர்களின் சராசரி நிறம், முடி அமைப்புடன் பொருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படித்தான் 2 மண்டை ஓடுகளின் 2,500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் முக அமைப்பு வடிவமைக்கப்பட்டது. இதை வைத்துதான் கீழடியில் வாழ்ந்த மக்கள் இந்த தோற்றத்தில் இருக்கிறார்கள் என்று சொல்கிறோம். இந்த ஆய்வு பணிகளுக்கு சராசரியாக 6 மாதங்கள் வரை ஆகிவிட்டது." என்றார்.












Click it and Unblock the Notifications