ரயில்வே கார்டுக்கே இந்த நிலைமை! கையில் கத்தியால் வெட்டி செல்போன், பேக்கை பறித்து சென்ற மர்ம கும்பல்!
மதுரை: ரயில்வே கார்டு கையை வெட்டி மர்ம நபர்கள் பேக்கை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் நகை, பணம், உடைமைகள் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பயணிகளிடம் கொள்ளை அடிப்பது போக, ரயில்வே கார்டு பணியாளரிடமே கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து நெல்லை செல்லும் காலி பெட்டிகள் ரயிலின் கார்டாக இருந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ராக்கி (28). இந்த ரயில் மதுரை கூடல் நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்திருந்த நிலையில், அந்த ரயிலில் ஏறியுள்ளனர் மர்ம நபர்கள் சிலர்.
அந்த மர்ம நபர்கள், ரயிலில் கார்டாக இருந்த பெண் பணியாளரின் கையை கத்தியால் கிழித்து, அவர் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். கத்தியால் கையில் கிழித்ததில் காயமடைந்த கார்டு ராக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மர்ம நபர்கள் பறித்துச் சென்ற தனது கைப்பையில் செல்போன் மற்றும் பணம் இருந்ததாகவும், தனது செயினை அவர்கள் பறித்தபோது தர மறுத்ததால் கையில் வெட்டியதாகவும் ராக்கி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications