தேர்தல் முன்விரோதம்.. பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் முன்னாள் தலைவர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை!
மதுரை: மதுரை மாவட்டம் கார்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் அதிமுக கிளைச் செயலாளராகவும், கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்தவர் கருப்புச்சாமி. இவருக்கும், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முனியசாமிக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கருப்புச்சாமி தனது மகனுடன் கார்சேரி கோயில் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அவரை அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முனியசாமி, அவரது உறவினர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட 12 பேர் மீது சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கானது மதுரை மாவட்ட 6வது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். தேர்தல் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கார்சேரி ஊராட்சிமன்ற தலைவர் கருப்புசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தை சேர்ந்த தமிழ்செல்வம், சௌந்திரபாண்டி, பிரபுதேவா, தற்போதைய கார்சேரி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இளவரசன், கவியரசன், அஜித், வெண்ணிலா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.48 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து அருள் மணிகண்டன், பாலமுருகன், ராஜாங்கம் ஆகிய மூவர் விடுவிக்கப்பட்ட நிலையில் மணிக்குமார் என்பவர் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்ட 8 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் இளவரசன் ஆகியோர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications