கள்ளிபால் வாங்கி, 5வது நாளில் வாயில் ஊற்றி.. காலைபிடிச்சு தரையில் அடித்தே.. நடுங்க வைத்த பாண்டியம்மா
5 நாள் பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொன்ற பாட்டி வாக்குமூலம் தந்துள்ளார்
மதுரை: "ஒரு பாட்டிலில் கள்ளிப்பால் வாங்கி வந்தோம்.. பிறந்து 5வது நாள் ஆன குழந்தைக்கு ஊத்தினோம்.. அப்பறம் அதன் காலை பிடிச்சு, தரையில் அடித்தே கொன்றோம்" என்று குலைநடுங்கும் வாக்குமூலத்தை பாட்டி பாண்டியம்மாள் தந்துள்ளார். இப்போது தாயும் - மகனும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் தவமணி - சித்ரா தம்பதி... இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.. 10ம்தேதி சித்ராவுக்கு திரும்பவும் பிரசவம் ஆனது.

அப்போது 4-வதாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. ஆனால் அடுத்த 3நாளில் அந்த குழந்தை இறந்துவிட்டது என்று சொல்லி ஆற்றங்கரையோரம் புதைத்துவிட்டனர்.
விஷயம் சோழவந்தான் போலீசுக்கு தெரிந்து வழக்கு பதிவு செய்து விசாரணை ஆரம்பமானது. உடனடியாக புதைக்கப்பட்ட குழந்தை தோண்டி எடுக்கப்பட்டது. அங்கேயே அரசு டாக்டர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.. இதை பார்த்து பயந்துபோன தவமணியும் அவரது அம்மாவும் போலீசில் வந்து சரணடைந்தனர். தவமணிக்கு 33 வயது, அவரது அம்மா பாண்டியம்மாளுக்கு 55 வயது!
இருவருமே கைதானதையடுத்து, பாட்டி பாண்டியம்மாளின் வாக்குமூலம் பெறப்பட்டது.. அதை கேட்டு போலீசாரே திகைத்துவிட்டனர்.. "10-ந் தேதி சித்ராவுக்கு குழந்தை பிறந்தது.. அதுவும் பொண்ணா போச்சு.. 3 நாள் மேலக்கால் அரசு ஆஸ்பத்திரியிலேயே இருந்தோம்.. அப்பறம் வீட்டுக்கு குழந்தையுடன் வந்தோம்.. பிறந்து 5வதுநாள்தான் குழந்தையை கொல்ல முடிவு செய்தோம்.
அன்னைக்கு குழந்தையை சித்ரா தூங்க வெச்சிட்டு, மற்ற 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு வெளியே இருந்தா.. அப்பதான் நாங்க ஒரு பாட்டிலில் கள்ளிப்பால் வாங்கி வந்தோம்.. குழந்தைக்கு ஊற்றினோம்.. அது வாந்தியெடுத்து கொண்டே இருந்தது.. அப்பறம், குழந்தையின் கால்களை பிடிச்சு தரையில் ஓங்கி அடிச்சோம்.. இதில் குழந்தைக்கு தலையில் பலமா அடிபட்டு அதுலதான் இறந்துபோச்சு.. அப்பறம் வீட்டு பக்கம் இருக்கும் கருவேலம் மரங்களுக்கு அடியில குழியை தோண்டி நாங்களே புதைச்சிட்டோம்" என்றார்.
இதையடுத்து தவமணி, பாட்டி பாண்டியம்மாள் இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து 2 நாள் ஆகியும் அந்த அதிர்ச்சி இன்னமும் மாவட்டத்தில் அடங்காமலேயே உள்ளது. பெண் குழந்தைகள் வளர்ப்பு குறித்த புரிதல் இல்லாததால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் இல்லாததால்தான் அக்குழந்தைகளை கொன்று வருவது அதிகரிக்க தொடங்கி உள்ளது.. ஆண் பிள்ளை தான் வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களை தூக்கி உள்ளே வைத்தால்தான் இந்த கள்ளிப்பாலுக்கும், எருக்கம்பாலுக்கும் ஒரு முடிவு கிடைக்கும்!












Click it and Unblock the Notifications