கிறிஸ்துவம், இஸ்லாமியர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்! சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை கருத்து
மதுரை: சிறார் நீதி சட்டத்தின் கீழ் கிறிஸ்தவம், இஸ்லாம் மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
மதுரையில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி குழந்தையில்லை. அவரது சகோதரருக்கு 3 குழந்தைகள். அவரின் சகோதரர் அண்மையில் இறந்துவிட்டாராம். இதனால் அவருடைய 8 வயது மகனை தத்தெடுக்க முடிவு செய்தாராம்.

இதற்கு சம்பந்தப்பட்ட குழந்தையின் தாய், அதாவது தனது சகோதரரின் மனைவியும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதையடுத்து தத்தெடுப்பு பத்திர பதிவுக்காக மேலூர் கிழக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் அந்த நபர் விண்ணப்பித்தார்.
ஆனால் இஸ்லாம் மதம் தத்தெடுப்பை அனுமதிக்கவில்லை எனக் கூறி அந்த விண்ணப்பத்தை சார் பதிவாளர் நிராகரித்தார். இதனால் அதை ரத்து செய்து தனது தத்தெடுப்பை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "இஸ்லாம் மதம் குழந்தை தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் சிறார் நீதி சட்டம் 2000-இன் கீழ் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம், மத பின்னணியில் அடிப்படையில் விருப்பமுள்ள பெற்றோர் குழந்தைகளை தத்தெடுக்க வழிவகை செய்கிறது.
சிறார் நீதிச் சட்டம் குழந்தைகளை தத்தெடுக்க உதவுகிறது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காவிட்டாலும் அந்த மதத்தினர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம். இந்த தத்தெடுப்பு இந்து தத்தெடுப்புகள் மற்றும் பராமரிப்பு சட்டம் 1956 சட்ட விதிகளுக்குட்பட்டது.
ஆகையால் இந்த வழக்கில் குழந்தையை தத்து கொடுப்பவரும் தத்து எடுப்பவர்களும் இஸ்லாமியர்கள். இவர்கள் குழந்தை தத்தெடுப்பு சிறார் நீதி சட்டம் 2015 இல் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள், விதிகள், ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதற்காக தத்தெடுப்பு பத்திரத்தை பதிவு செய்ய எளிமையான வழிகளை நாட முடியாது. இதை சட்டம் அங்கீகரிக்கவும் இல்லை. குழந்தை தத்தெடுப்பு என்பது அந்த குழந்தையின் உண்மையான பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற வேண்டும்.
இதனால் குழந்தையை தத்தெடுப்பவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும். 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் தத்தெடுக்கப்படும் போது சம்பந்தப்பட்ட குழந்தையின் ஒப்புதலைப் பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் தத்தெடுப்பு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு குழந்தையின் வயது, புரிதலைக் கருத்தில் கொண்டு குழந்தையின் விருப்பங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து திருப்தியடைய வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
தத்தெடுப்பு முறையில் குழந்தையின் நலன் மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும். இன்று வரை தத்தெடுக்கும் உரிமை அரசியலமைப்பின் பிரிவு 21இன் எல்லைக்குள் ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் தத்தெடுக்கும் உரிமை நிச்சயம் ஒரு மனித உரிமையை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளன.
இதில் சட்டப்பூர்வ விதிகளின் அடிப்படையில் தத்தெடுக்கும் உரிமையும் அடங்கும். இதனால் மனுதாரர்கள் தத்தெடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மனுதாரரின் தத்தெடுப்பு விண்ணப்பம் அதற்கான இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட மூன்று வாரங்களுக்குள் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியருர்ரு சென்றதும் 3 வாரத்தில் தீர்வு காணப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தத்தெடுக்க அனுமதி வழங்கிய பிறகு அதை பதிவு செய்யத் தேவையில்லை.
அண்மையில் தத்தெடுப்புக்கு அனுமதி வழங்குவதில் நீண்ட தாமதம் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. குழந்தை பிறக்கும்போதோ அல்லது குழந்தைப் பருவத்தின் பிற்பகுதியிலோ தத்து கொடுப்பது என்பது ஒரு நிரந்தரமான மற்றும் வளர்ந்த குடும்பத்தை உருவாக்கும்.
இதில் சம்பந்தப்பட்ட குழந்தையின் உடல், உணர்ச்சி, உறவு, கல்வித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. எனவே தத்தெடுப்பு நடைமுறைகளை தாமதப்படுத்தும்போது குழந்தைகளின் வாழ்க்கை பாதையில் கணிசமான மாற்றத்துக்கான அனுபவங்கள், வாய்ப்புகளை தாமதப்படுத்துகிறது. எனவே தத்தெடுப்பு நடைமுறைகளை விரைவுப்படுத்த வேண்டும் என கூறி அந்த வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications