நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள்.. பட்டா வாங்கியிருந்தாலும்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எமனேசுவரத்தில் அரசு புறம்போக்கு கண்மாய் பகுதியில் தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்பு பட்டாக்களை ரத்து செய்யும் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், கட்டிடங்கள் கட்டியவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டியவர்கள் பலரும் தற்போது அவதிப்பட்டு வருகிறார்கள். நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி பல வருடம் முன்பே பட்டா வாங்கியவர்கள் கூட இப்போது அவதிப்படுகிறார்கள்.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால், எத்தனை வருடம் முன்பு பட்டா வாங்கியிருந்தாலும், அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசே ஆக்கிரமித்தாலும் இதுதான் நிலையாக உள்ளது. 2007ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நீர்நிலைகளை குடியிருப்புகளாக வகை மாற்றம் செய்திருந்தாலும் அது செல்லாது என்கிற நிலையே அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. அப்படித்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எமனேசுவரத்தில் அரசு புறம்போக்கு கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பகுதியில் தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி வழங்கப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பு பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். ஆனால் நான் அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் அரசின் சார்பில் எடுக்கவில்லை. என் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், அரசு புறம்போக்கு நீர்நிலையில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மனுதாரர் மனு அளித்திருக்கிறார். இதுபோல் மனு அளிக்கும்போது அந்த மனுக்களை நிலுவையில் பரிசீலிக்காமல் இருப்பது கடமை தவறுவதாகும். இதனால் மனுதாரர் அளித்த மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலித்து 3 மாதத்தில் சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications