Exclusive: குமரெட்டியாபுரம், பரந்தூர் போல மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டம்-ஏன்?
மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான குமரெட்டியாபுரம், சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிரான பரந்தூர் கிராம மக்களைப் போல மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக தங்களது வீடுகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து மதுரை அருகே சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன உடைப்பு அருகிலேயே மாற்று இடம் தர வேண்டும், அகற்றப்படுகிற வீடு, நிலத்துக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டவை சின்ன உடைப்பு கிராம மக்களின் கோரிக்கை.
குமரெட்டியாபுரம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் என்ற குக்கிராமத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் 100-வது நாளில்தான் 2018-ல் 13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடித்தான் ஆக வேண்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

பரந்தூர்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக பரந்தூர் பகுதியில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தம்முடைய நிலம் பறிபோகிறதே என்ற துயரத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா கணபதி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

மதுரை சின்ன உடைப்பு மக்கள் போராட்டம்: இந்த வரிசையில் தற்போது மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டமும் இணைந்துள்ளது. மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் வீடுகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து சின்ன உடைப்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக வீடு, நிலத்தை தர தயாராக இருக்கும் சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம், வீடு கட்டித் தர வேண்டும்; தற்போதைய சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.

தீக்குளிப்பு முயற்சி: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கிராமத்தின் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தினர். சிலர் தீக்குளிக்கவும் முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்- pic.twitter.com/OTlowgRAty
— மா.ச. மதிவாணன் (@masamathi) November 19, 2024
போலீசார் குவிப்பு: நாம் சின்ன உடைப்பு கிராமத்துக்கு நேரில் சென்ற போது பிரதான சாலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கிராம மக்கள் குமரெட்டியாபுரம், பரந்தூர் பாணியில் பந்தல் அமைத்து நாற்காலிகளையும் தரை விரிப்புகளையும் போட்டு அமர்ந்திருந்தனர். இந்த பந்தலிலேயே பொது சாப்பாடு சமைத்து தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தில் மாணவிகள் பள்ளி சீருடையுடன் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் என ஒட்டுமொத்த சின்ன உடைப்பு கிராம மக்களுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சின்ன உடைப்பு கிராமத்தில் ஒன் இந்தியா தமிழ்: நாம் போராட்டக் குழுவின் தலைவரான தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் மகாசபை தலைவர் ஜெயக்குமாரை சந்தித்து பேசினோம். நம்மிடம் பேசிய ஜெயக்குமார், தங்களது வீடு நிலத்தை அகற்ற அதிகாரிகள் வந்த போது இன்றைய சந்தை மதிப்பில் இழப்பீடு தர வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வீடுகள் கட்டித் தர வேண்டும். இந்த கோரிக்கைகளை அதிகாரிகளிடமும் தெரிவித்துவிட்டோம். தற்போது நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காண முயற்சிக்கிறோம் என்றார் இந்தப் போராட்டத்தால் சின்ன உடைப்பு கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.













Click it and Unblock the Notifications