மதுரை கள்ளழகர் கோவில்.. சித்திரை திருவிழா.. கோயில் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பு
மதுரை : தண்ணீர் பீய்ச்ச திரவியங்கள், வேதிப்பொருள் கலக்கக்கூடாது என்றும் கள்ளழகருக்கு சுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் க அழகர் கோவில் இணை கமிஷ்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா விரைவில் தொடங்க போகிறது.உலக பிரசித்தி பெற்ற இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களுமே மதுரை விழாகோலம் பூண்டிருக்கும்..குறிப்பாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்துவிடுவார்கள். அப்போது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும். அப்படி பீய்ச்சி அடிக்கப்படும் தண்ணீரில் கெமிக்கல் கலக்கக்கூடாது என்று பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மதுரை அழகர்கோவில் இணை கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. 3-ந் தேதியன்று மாலை 6 மணியில் இருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரைக்கு வருகை தருகிறார்.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 5-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடைபெறும். அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து பீய்ச்சுகிறார்கள். இதனால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றார்கள்.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு கோயில் நிர்வாகம் சார்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications