தவெக சார்பில் இலவச உணவு.. மதுரையில் விலையில்லா விருந்தகத்தை காலி செய்த அதிகாரிகள்.. காரணத்தை பாருங்க
மதுரை: மதுரையில் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கிய விஜய் கட்சியான தவெகவின் விருந்தக பூத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக முதல் அரசியல் மாநாட்டை தமிழக வெற்றிக் கழகம் நடத்தி முடித்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொடி, கொள்கைகளை பற்றி விளக்கினார். பாஜக கொள்கை எதிரி எனவும், திமுக அரசியல் எதிரி எனவும் கூறினார். அதேபோல் திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கள் என்றார். இதுதவிர தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க வந்தால் ஏற்போம் என்றும் கூறினார்.
விஜயின் இந்த மாநாடு பேச்சு தான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் மதுரையில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் நடிகர் விஜயின் தவெக கட்சியினர் நடத்திய விலையில்லா விருந்தகத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.
அதாவது மதுரை நோதாஜி ரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. இதற்காக சாலையோரம் பூத் போன்று அமைத்து இருந்தனர். மதுரை தவெக தெற்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி தலைமையில் கட்சியினர் மதிய உணவை கடந்த 150 நாட்களாக வழங்கி வருகின்றனர். தினமும் 200 பேருக்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாக உணவு வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது நேதாஜி ரோட்டில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விலையில்லா விருந்தகம் அகற்றப்பட்டுள்ளது. மதுரை மாநாகராட்சி அதிகாரிகள் தான் விலையில்லா விருந்தகத்தை அகற்றி உள்ளனர். அதாவது நேதாஜி ரோட்டில் விலையில்லா விருந்தகத்தில் உணவு வழங்கும்போது ஏராளமான பொதுமக்கள் கூடிவிடுகின்றனர். அதேபோல் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக புகார்கள் சென்றுள்ளன. இந்த புகாரை தொடர்ந்து நேதாஜி ரோட்டில் நடிகர் விஜயின் விலையில்லா விருந்தகம் அகற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி தவெக கட்சியினரிடம் கேட்டபோது, ‛‛விலையில்லா விருந்தகம் மூலம் உணவு வழங்க மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அவர்கள் வாய்மொழியாக அனுமதி கொடுத்தனர். இப்போது அவர்கள் விலையில்லா விருந்தகத்தை அகற்றி உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி ஆணையரிடம் முறையிட உள்ளோம்'' என்றனர்.












Click it and Unblock the Notifications