மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மதுரை: மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை மற்றும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வரும் அக்டோபர் 27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை நாளை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சுதந்திர போராட்டத் தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா வருகிற 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த இரு நாட்களிலும் ஏராளமானோர் இவர்களது நினைவிடங்களுக்கு வருகை தந்து மரியாதை செலுத்துவார்கள். இந்த விழாக்களில் தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமுதாய அமைப்பினர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையில் வரும் அக்டோபர் 27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவைகளும் 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications