மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கு.. முதல்வரின் நடவடிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு!
மதுரை: மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மண்டல தலைவர் உள்பட 7 பேரை முதலமைச்சர் பதவி விலக வைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது, நிர்ணயிக்கப்பட்ட வரியை விட குறைவாக இருந்ததாகவும், இதனால் மாநகராட்சிக்கு ரூ.150 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மண்டல தலைவர்கள் 5 பேர், நிலைக்குழு உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை என்றும், வழக்கை தமிழ்நாடு காவல்துறையே நேர்மையாக விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதே நேரம், முறைகேடு வழக்கில் மண்டல தலைவர் உள்பட 7 பேரை முதலமைச்சர் பதவி விலக வைத்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வழக்கின் பின்னணி:
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் இருக்கின்றன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு குறிப்பிட்ட தொகை வரியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரி விஷயத்தில்தான் முறைகேடு எழுந்திருப்பதாக புகார். அதாவது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட, குறைவான தொகையை வரியாக வசூலித்திருக்கிறார்கள் என்றும் இதனால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.150 கோடி இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அப்போதைய மாநகராட்சி ஆணையராக இருந்த தினேஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் ஓய்வு பெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் ஆய்வாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த முறைகேட்டில் மண்டல தலைவர்களும் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தனர். எனவே மண்டல தலைவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில்தான் மண்டல தலைவர்கள் 5 பேர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் 2 பேர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அவர்களும் ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications