கல்விக் கடன் திட்டம் சபாஷ்.. மதுரையில் நீதிபதி அசத்திட்டாரு.. விழித்த தூத்துக்குடி அரசு வங்கி ஊழியர்
மதுரை: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்திலுள்ள ஒரு தேசியமய வங்கி கிளையில் கல்விக் கடன் வழங்குவதற்கு, லஞ்சம் வாங்கியதாக பதிவான வழக்கில், வங்கியின் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த தீர்ப்பானது, கல்விக்கடனை எதிர்நோக்கியிருக்கும் ஆயிரமாயிரம் மாணவ, மாணவிகளுக்கு புது தைரியத்தையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.. என்ன நடந்தது? வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2010-ல் நடந்த சம்பவம் இதுவாகும்.. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள ஒரு தேசியமய வங்கி கிளையில், முது நிலை மேலாளராக பணிபுரிந்தவர் சாமுவேல் ஜெபராஜ்.. இதே வங்கியில் பகுதி நேர ஊழியராக நாராயணன் பணிபுரிந்தார். இவர்களுக்கு 63 வயதாகிறது.

மாணவிகளிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்
2 மாணவிகள் நர்சிங் படிப்பிற்காக, இந்த வங்கியில் கல்விக் கடன் கோரி, கடந்த 2010ல் விண்ணப்பித்தனர். இந்த கல்வி கடனை அனுமதிக்க வேண்டுமானால், ரூ.8000 லஞ்சம் வேண்டும் என்று சாமுவேல் ஜெபராஜ், நாராயணன் கேட்டுள்ளனர்..
இது தொடர்பாக புகார் வெடித்து, சிபிஐ இது சம்பந்தமான வழக்கை பதிவு செய்தது.. இந்த வழக்கின் விசாரணை, மதுரை சிபிஐ கோர்ட்டில் நடந்தது. அப்போது சம்பந்தப்பட்ட 2 அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, நீதிமன்றம் 2 அதிகாரிகளையும் கடந்த 2018 ல் விடுவித்துவிட்டது.
இவர்களின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பில் மதுரை ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோதே சாமுவேல் ஜெபராஜ் இறந்துவிட்டார்.. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பின் விவரம் இதுதான்:
மத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்
"ஜனநாயக நாட்டில், அதிகாரிகள் தங்களது கடமையை செய்ய வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்படுவதன் மூலம் அல்லது அதை மீறுவதன் மூலம் ஊழலில் ஈடுபடுவதற்கான வழிகளை கண்டுபிடிக்கிறார்கள்.. ஊழல் முறையின் அலைவரிசை பல்வேறு கோணங்களில் பரவுகிறது. போதிய நிதி ஆதாரம் இல்லாமல், ஏழை மாணவர்களால் கல்லுாரி கல்வியைத் தொடர முடியாது.
சமூக நீதியை நிலைநாட்டும் நலத்திட்டமாக கல்விக்கடன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் எந்த ஒரு மாணவருக்கும் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதே, மத்திய அரசின் கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம். எனவே, கல்வி கடனுக்காக வங்கியை அணுகும் மாணவர்களிடம் இரக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நீதிமன்றம் விடுதலை உத்தரவு செல்லாது
ஆனால், இந்த வழக்கில் கல்விக் கடனுக்காக லஞ்சம் பெறப்பட்டுள்ளது. சாமுவேல் ஜெபராஜ் சார்பில் நாராயணன் லஞ்ச பணத்தை பெற்றுள்ளார். சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டை சிபிஐ தரப்பும் நிரூபித்துள்ளது. விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது. அந்த நீதிமன்றம் தவறுதலாக 2 பேரையும் விடுதலை செய்துள்ளது. எனவே, அந்த நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது சாமுவேல் ஜெபராஜ் இறந்துவிட்டதால் , ஊழல் தடுப்பு சட்டப்படி அவருக்கு தண்டனை விதிக்க முடியாது. நாராயணனுக்கு எதிராக சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் தடை எதுவும் இல்லை.
தண்டனை - அபராதம் - இழப்பீடு
எனவே, அவருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. கடன் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.35 ஆயிரத்தை இழப்பீடாக அபராத தொகையிலிருந்து வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
கல்விக்கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகளிடம், மதுரை ஹைகோர்ட் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு , மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. அத்துடன் நம்பிக்கையையும், நிம்மதியையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications