அவ்வளவு சொல்லியும் கேட்கல.. நெல்லை CEOக்கு 1 வாரம் சிறை! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!
மதுரை: நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாததால் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு 1 வாரம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு இது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றம் சிறை தண்டனையை வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் ஆசிரியர் ஹெலினி ரோனிகா ஜோசுபெல். இவர் இங்கு உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக தற்காலிகமாக வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு முன்பு இருந்த ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்று விட்டதால் அவருக்கு பதில் இவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தற்காலிக ஆசிரியராக இருக்கும் தன்னை நிரந்தர ஆசிரியராக மாற்ற வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். கோரிக்கையை ஏற்ற நிர்வாகம், ஆசிரியை ஹெலினியை நிரந்தர ஆசிரியராக மாற்ற வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரைத்திருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களை கூறி இந்த பரிந்துரையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏற்க மறுத்திருந்தார். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையை நாடிய ஆசிரியை, தன்னை நிரந்தர ஆசிரியராக மாற்ற வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று, கடந்த 2023 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஆசிரியை உடனடியாக நிரந்தர ஆசிரியராக ஆக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.
ஆனால் தீர்ப்பு வந்து ஆண்டுகள் பல கடந்தும் கூட இன்னமும் ஆசிரியை நிரந்தர ஆசிரியராக மாற்றவில்லை. இதனால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியை வழக்கு தொடுத்திருந்தார்.
அதில் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பின்பற்றவில்லை என்றும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது பணியை நிரந்தர பணியாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் மாற்று முதன்மை கல்வி அதிகாரிக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராத தொகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றி பிப்ரவரி 26 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications