நகைக்கடன் புதிய விதிகளை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு.. ரிசர்வ் வங்கிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையால் வங்கிகளில் நகை அடமான கடன் பெற்றவர்கள, நகைகளை இழக்க நேரிடும். ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக்கடன்களை பெற இயலும்..இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது.. எனவே நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை செல்லாது என உத்தரவிட கோரினார். இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை காரணமாக, வங்கியில் நகைக்கடன் வாங்குவோர், நகைக்கடனுக்குரிய பணத்தை அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்ட வேண்டும்.. ஓராண்டு கடன் என்றால் ஓராண்டின் முடிவிலேயே வட்டி, அசல் என அனைத்தையும் கட்ட வேண்டும்.. அப்படி கட்டி நகையை மீட்டாக வேண்டும்.. அப்படி மீட்கப்பட்ட பின்னர் மறுநாள் தான் அதே நபர் வங்கியில் நகையை அடகு வைக்க முடியும்.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள், எஸ்பிஐ, கனரா வங்கி உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக நகைக்கடன் வாங்கிய மக்கள் நகைகளை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுத்து பழைய விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை..
இந்நிலையில் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைராஜன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறுகையில், "ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி அன்று நகைக்கடன் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வங்கிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த விதிமுறைகள் ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
இந்த சுற்றறிக்கை காரணமாக வங்கிகளில் நகை அடமான கடன் பெற்றவர்கள், மொத்த தொகையையும் செலுத்தி நகையை திருப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் உரிய நேரத்தில் உரிய தொகையை ஏழைகள் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் ஏழைகள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பலர் கடனை செலுத்த முடியாமல் நகைகளை இழக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது.
மேலும் தற்போது வெளியிடப்பட்டு உள்ள ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக்கடன்களை பெற இயலும். இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது. ஆகவே தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவிக்க வேண்டும். முறையான வழிகாட்டுதல்களுடன் புதிய சுற்றறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்" இவ்வாறு பிச்சைராஜன் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்தார்கள்.












Click it and Unblock the Notifications