எஸ்எஸ்சி தேர்வுகளில் பிராந்திய மொழிகள் புறக்கணிப்பு.. ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி.. சு.வெங்கடேசன்!
மதுரை: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் பல்வேறு துறைகளில் மொத்தம் 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு
இதனைத்தொடர்ந்து அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை பெற விரும்புவோர், இந்த பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு என தனியாகவே தயாராவார்கள். இப்போது 20,000 பணிக்காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இதனிடையே இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

பிராந்திய மொழிகள் புறக்கணிப்பு
க்ரூப் பி மற்றும் க்ரூப் சி பிரிவு பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் இந்த தேர்வு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் எதிலும் நடத்தப்படாது. எனவே, மாநில மொழிகளில் கல்வி பயின்றவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேர்கிறது. இதனிடையே மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்பும் முக்கிய தேர்வான இதைப் பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

கனிமொழி கண்டனம்
இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், பணியாளர் தேர்வாணையத்தால், மத்திய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்தியாவின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என்று பதிவிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன் ட்வீட்
இதனைத்தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 20000 மத்திய அரசுத் துறை/ நிறுவனங்களின் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வில், இந்தியில் கேள்வித் தாள் உண்டு. தமிழில் இல்லை. இது ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி என்று கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்திக்கான தனி உரிமையை மறுப்போம். இந்தியாவுக்கான பொது உரிமையை நிலைநிறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications