தனிஷ்க் கொள்ளைக்கு முன்.. மீனாட்சியிடம் நிஷாந்த் போனில் சொன்னது என்ன? போட்டு உடைத்த மதுரை கமிஷ்னர்
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடந்த மெகா கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நாட்டையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பல முக்கியமான உண்மைகளை உடைத்துள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுவிட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் பங்கு, நகைக்கடையின் பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் அடுத்தகட்ட விசாரணை குறித்துக் காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

மீனாட்சிக்குத் தெரிந்துதான் கொள்ளை நடந்தது
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான யூடியூபர் நிஷாந்துடன், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சிக்கு இருந்த தொடர்பு குறித்துப் பேசிய காவல் ஆணையர், மீனாட்சிக்குத் தெரிந்துதான் இந்தக் கொள்ளை நடந்துள்ளது, எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொள்ளைக்கு முன்பும் பின்பும் நிஷாந்தும் மீனாட்சியும் செல்போனில் பேசிய உரையாடல்களை ஆய்வு செய்ததன் மூலமே, இந்தச் சதியில் மீனாட்சிக்கும் முழு உடந்தை இருப்பது நிரூபணமானதாக அவர் கூறியுள்ளார். அதாவது கொள்ளைக்கு முன் நிஷாந்த் போனில் மீனாட்சியிடம் பேசி திட்டமிட்டுள்ளார்.
11.384 கிலோ நகைகளும் முழுமையாக மீட்பு
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் துல்லியமான எடை குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆணையர், நகைக்கடையிலிருந்து திருடு போன 11 கிலோ 384 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் நூறு சதவீதம் முழுமையாக மீட்கப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தினார். கொள்ளையடித்த பிறகு, நிஷாந்த் அந்த நகைகளைத் தனது தந்தை சுரேஷிடம் கொடுத்துள்ளார், தந்தைதான் அந்த நகைகளை வாங்கி மறைத்து வைக்க உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைக்கடை நிர்வாகத்தின் பாதுகாப்புக் குறைபாடுகள்
கடையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சுட்டிக்காட்டிய காவல் ஆணையர், தீபாவளிப் பண்டிகை விற்பனையை முன்னிட்டு முழு கட்டிட வேலைகளும் முடிவதற்கு முன்பே அவசரமாக இந்த நகைக்கடை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கடையின் பின்புறம் எந்தவொரு சிசிடிவி கேமராவும் பொருத்தப்படவில்லை. கடைக்கு உள்ளே மட்டுமின்றி, கடையைச் சுற்றிலும் அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது அவசியம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
யூடியூப் பார்த்து சதியா? போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்
மிகத் துல்லியமாகத் திட்டமிட்டே இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கொள்ளையடிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு இந்தச் சதியைச் செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டியுள்ளது. மேலும், கொள்ளைக்குப் பிறகு தான் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே இருந்ததாக நிஷாந்த் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.. ஆனால் இதில் சில குழப்பங்கள் உள்ளன. அவர் வெளிமாநிலங்களுக்குச் சென்றாரா என்பதைத் தீவிரமாக விசாரித்த பிறகே உறுதி செய்ய முடியும் என ஆணையர் குறிப்பிட்டார்.
தற்போது நிஷாந்த், மீனாட்சி மற்றும் தந்தை சுரேஷ் ஆகிய மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களைக் காவல்துறைக் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, இந்தக் கொள்ளையின் பின்னணியில் உள்ள அனைத்து மர்மங்களும், வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற முழு உண்மையும் வெளிவரும் என மதுரை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
